
தமிழகத்தில் மின் தேவை அதிகரிப்பு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மின் தேவையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்சாரம் வீடுகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக கடந்த மார்ச் 27-ம் தேதி அதிகபட்சமாக 17,196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருந்தது, தமிழகத்தின் ஒரு நாள் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 387 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் தேவை நாள் தோறும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஏற்படும் மின் வெட்டு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட டுவிட்டர் பதிவிற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்துள்ள பதில் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓராண்டு சாதனையை பார்க்க மின்சாரம் இல்லை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அந்த டுவிட்டர் பதிவில், ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..! என அந்த டுவிட்டர் பதிவில் சீமான் கூறியிருந்தார்.
மின் இணைப்பு எண்ணை கேட்ட அமைச்சர்
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன். என கூறியிருந்தார்.
வீட்டில் தங்க அனுமதி கேட்ட சீமான்
இதற்கு மீண்டும் பதில் அளித்த சீமான், மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்ப நாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்! என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
கரூர் வீட்டில் விருந்தினராக தங்குங்கள்
இதற்கு மீண்டும் பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்ட டுவிட்டரில், குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே! விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு.அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்! என கேள்வி எழுப்பியிருந்தார்.இதனை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மின் இணைப்பு நம்பரை தான் அமைச்சர் கேட்கிறார். சீமான் கொடுக்க வேண்டியது தானே, என ஒரு சிலர் கூறி வருகின்றனர். அதே வேளையில், மற்றொரு தரப்பினரோ நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பெரியம்மா வீட்டில் தான் கரண்ட் இல்லையென கூறியுள்ளார். ஆனால் இது கூட தெரியாமல் சீமான் வீட்டு மின் இணைப்பு நம்பர் கேட்கிறாரே அமைச்சர் என கூறி வருகின்றனர்.