பலப் பொறுப்புகளில் பணியாற்றிய அமுதா, கடந்த ஆண்டு டெல்லியில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமுதாவை மீண்டும் தமிழகப் பணிக்குக் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது.
டெல்லியில் பிரதமர் அலுவலகப் பணியிலிருந்து தமிழக அரசுப் பணிக்கு திரும்பிய அமுதா ஐ.ஏ.எஸ். ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ் 1994-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான பி.அமுதா, தமிழகத்தில் பல்வேறு மட்டங்களில் அதிகாரியாகப் பணியாற்றியவர். தருமபுரி ஆட்சித் தலைவராக இருந்தபோது, சிசுக்கொலை தடுப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு உள்பட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர். காஞ்சிபுரம் ஆட்சித் தலைவராக இருந்தபோது செங்கல்பட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க நேரடியாக அவர் களமிறங்கியது பெரும் பாராட்டை அவருக்குப் பெற்று தந்தது. பின்னர் பல அரசுப் பொறுப்புகளில் இருந்த அமுதா, நீர் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் திட்ட அதிகாரியாக இருந்தவர்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைந்தபோது, அரசு சார்பில் இறுதிச் சடங்கு பணிகளை முன்னின்று ஒருங்கிணைத்தவர் அமுதாதான். குறிப்பாக கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில்தான் அடக்கம் செய்யப்படும் என்பது மதியம் 12 மணி அளவில்தான் நீதிமன்ற உத்தரவு மூலம் உறுதியானது. பின்னர் குறுகிய காலத்தில் மின்னல் வேகத்தில் கருணாநிதியின் இறுதிச் சடங்குப் பணிகளை சிறு சிக்கல்கூட இல்லாமல் முடித்துக்காட்டினார் அமுதா.
பலப் பொறுப்புகளில் பணியாற்றிய அமுதா, கடந்த ஆண்டு டெல்லியில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமுதாவை மீண்டும் தமிழகப் பணிக்குக் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவரை தமிழக அரசுப் பணிக்கு மாற்றியது. இந்நிலையில் தற்போது அவர் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்துறையின் மூலம்தான் முக்கியமான மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம், ஊரக சாலைகள் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கிராம மக்கள் பயனடையும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல், முறைகேடுகள் எனச் சர்ச்சைகள் ஏற்படுவது அவ்வப்போது வழக்கம். பல கிராமங்களில் மக்கள் நேரடியாகப் பயன் அடையும் இத்திட்டத்தை சிக்கல் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்ற வகையில், திறமையான அதிகாரி எனப் பெயரெடுத்த அமுதாவை திமுக அரசு களமிறக்கியிருப்பதாகப் பார்க்கலாம்.