ரஜினி மகள் தொடங்கிய ஹூட் செயலியிலும் களமிறங்கிய மு.க.ஸ்டாலின்.. கருத்துகளைப் பகிர அழைப்பு விடுத்த முதல்வர்.!

By Asianet TamilFirst Published Nov 6, 2021, 9:33 PM IST
Highlights

கடந்த மாதம் 26 அன்று,  நடிகர் ரஜினிகாந்த் முதல் ஆளாகப் பேசி, ஹூட் செயலியைத் தொடங்கி வைத்தார். அடுத்த நாளே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த செளந்தர்யா, ஹூட் செயலி குறித்து அவரிடம் விளக்கியதோடு, அவரது வாழ்த்தையும் பெற்றார். 

நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா தொடங்கிய ஹூட் செயலி மூலம் கருத்துகளை மனம் திறந்து பகிர்ந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா, குரல் சமூக ஊடகமாக ஹூட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் மட்டுமின்றி, சர்வதேச மொழிகளிலும் கையாளும் வசதி இந்தச் செயலியில் உள்ளது. கடந்த மாதம் 26 அன்று,  நடிகர் ரஜினிகாந்த் முதல் ஆளாகப் பேசி, ஹூட் செயலியைத் தொடங்கி வைத்தார். அடுத்த நாளே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த செளந்தர்யா, ஹூட் செயலி குறித்து அவரிடம் விளக்கியதோடு, அவரது வாழ்த்தையும் பெற்றார். 

இந்நிலையில் முதல்வர் அலுவலகம், குரல் ஊடகமான ஹூட் செயலில் இணைந்துள்ளது. இந்நிலையில், அந்த செயலி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதில், “தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். இதுவரை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஷேர்ஷாட், யூடியூப் என சமூக ஊடங்களில் என்னுடைய பணிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து வருகிறேன். நீங்களும் அதில் என்னைப் பின்தொடர்ந்து ஆதரவு தந்துக்கொண்டிருக்கிறீர்கள். அறிக்கைகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என வெவ்வேறு வடிவங்களில் முதலமைச்சர் அலுவலக செயல்பாடுகளை நீங்கள் அறிந்துகொள்ள முடிகிறது.

முதல்வராக நான் மேற்கொள்ளும் பணிகள், மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அண்மையில் தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிற குரல் ஊடகமான ஹூட் செயலி மூலமாகவும் இனி நீங்கள் தெரிந்துகொள்ளலாம். உங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். நான் ஏற்கனவே சொன்னது போல இது உங்களுடைய அரசு. உங்கள் கருத்தை அறிந்து கடமையாற்றும் அரசு. எனவே, உங்கள் கருத்துகளை மனம் திறந்து என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.” என்று அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். 
 

click me!