கருணாநிதி மகன் என பெருமை பேச்சு.. ஜெயலலிதாவை பின்பற்றுவது வெட்கக்கேடு.. ஸ்டாலினை வசைபாடிய சீமான்!

By Asianet TamilFirst Published Nov 6, 2021, 8:24 PM IST
Highlights

"திராவிடமென்றால் என்னவெனக் கேட்பதையே கோமாளித்தனமெனும் முதல்வர் ஸ்டாலின், ஆரியர்கள் கொண்டாடும் சித்திரை முதல் நாளினைத், தமிழர்களின் புத்தாண்டு நாளாகக் கடைபிடிக்கச் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சமில்லையா?”

‘கலைஞரின் மகன் நான்' என மேடைதோறும் கூறி, புளங்காகிதம் அடைந்து கொள்ளும் ஸ்டாலின், கருணாநிதி அறிவித்த தை முதல் நாளினைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கடைபிடிக்காது, ஜெயலலிதா அறிவித்த சித்திரை முதல் நாளினைப் புத்தாண்டாகக் கடைப்பிடிப்பது வெட்கக்கேடு இல்லையா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் 2022-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 (சித்திரை 1) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் ஏப்ரல் 14 அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று முடிவுக்கு திமுக அரசு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. கடந்த திமுக ஆட்சியில் தை 1 அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சி முடியும் வரை அந்தத் தினத்தைத்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று திமுகவினரும் கொண்டாடிவந்தனர். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அச்சட்டம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக ஏப்ரல் 14 அன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தை 1-க்கு மாற்றப்படுமா என்ற பேச்சு எழுந்தநிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியலில் சித்திரை 1-ஐ தமிழ்ப்புத்தாண்டு எனக் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக ஏற்று அறிவித்திருக்கும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழறிஞர்களும், தமிழ்ப்பெரியோர்களும் தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு எனச் சான்றுகளோடு எடுத்துக்காட்டி, நிறுவிய பின்னரும், கடந்தாட்சியின் தவறான முடிவைக் காரணமாகக் காட்டி, சித்திரை முதல் நாளையே புத்தாண்டென மீண்டும் அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தைத்திங்கள் முதல் நாளன்று கொண்டாடப்பட்ட தமிழர்களின் புத்தாண்டு திருநாள், ஆரியத் திரிபுவாதத்தால் சித்திரை முதல் நாளாக மாற்றப்பட்டது. இச்சூழ்ச்சியை வரலாற்றுச் சான்றுகளோடும் இலக்கியத் தரவுகளோடும் எடுத்துரைத்து, தைத்திங்களே தமிழர்களின் புத்தாண்டு நாள் எனத் தமிழ் முன்னோர்களும், அறிஞர் பெருமக்களும் நிறுவி நிலைநாட்டினர். மறைமலை அடிகளார், தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார், மு.வரதராசனார், இறைக்குருவனார், சின்னப்பத்தமிழர், கி.ஆ.பெ.விசுவநாதம், திரு.வி.க, பாரதிதாசன், சோமசுந்தர பாரதியார் எனப்பெரும் சான்றோர் கூட்டம், அதற்காக உழைத்திட்டு ஆய்வுரை மூலம் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டென அறுதியிட்டுக்கூறி, பேரறிவிப்பு செய்திட்டது.

பன்னெடுங்காலமாகத் தமிழ் மூத்தோரும், அறிஞர் பெருமக்களும் தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி வந்த நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அதனை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டார். ஆனால், அதன்பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தமிழறிஞர்களின் கருத்துகளையோ, தமிழ்த்தேசிய இனத்தின் தொன்ம விழுமியங்களையோ துளியும் மனதில் கொள்ளாது, தான்தோன்றித்தனமாக சித்திரை திங்கள் முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து, ஆரியக்குணத்தையும், அதிகாரச்செருக்கையும் வெளிப்படுத்தியது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான அரசுப்பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலிலும் சித்திரை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு என திமுக அரசால் அறிவிக்கப்பட்டிருப்பது ஆரியத்தின் நயவஞ்சகச்சூழ்ச்சிக்கும், வரலாற்றுத்திரிபுகளுக்கும் துணைபோகும் பச்சைத் துரோகமாகும். ஆரியத்திடம் திராவிடம் சரணடைந்து, தமிழர் அடையாளங்களை அடமானம் வைக்க முனையும் சந்தர்ப்பவாதமாகும். தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிந்த நவம்பர் முதல் நாள், ‘தமிழ்நாடு நாள்' எனக் கொண்டாடப்படுவதை அவசர அவசரமாக ஜூலை 18-க்கு மாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்ப்புத்தாண்டை சித்திரை முதல் நாளிலிருந்து தை முதல் நாளுக்கு மாற்றத்தயங்குவது ஏன்? இதுதான் ஆரியத்தை திராவிடம் எதிர்க்கிற போர்த்திறனா? இதுதான் ஆரியர்களுக்கெதிரான திராவிடர்களின் சமரசமற்ற சண்டையா?

‘கலைஞரின் மகன் நான்' என மேடைதோறும் கூறி, புளங்காகிதம் அடைந்து கொள்ளும் ஸ்டாலின், கருணாநிதி அறிவித்த தை முதல் நாளினைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கடைபிடிக்காது, ஜெயலலிதா அறிவித்த சித்திரை முதல் நாளினைப் புத்தாண்டாகக் கடைப்பிடிப்பது வெட்கக்கேடு இல்லையா? திராவிடமென்றால் என்னவெனக் கேட்பதையே கோமாளித்தனமெனும் முதல்வர் ஸ்டாலின், ஆரியர்கள் கொண்டாடும் சித்திரை முதல் நாளினைத், தமிழர்களின் புத்தாண்டு நாளாகக் கடைபிடிக்கச் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சமில்லையா?” என்று அறிக்கையில் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

tags
click me!