Corona Chennai : 10 ஆயிரம் தெருக்களில் கபடி விளையாடிய கொரோனா.. மண்டைய பிய்த்துக் கொள்ளும் அதிகாரிகள்.

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2022, 2:37 PM IST
Highlights

பல்வேறு  தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுவரினும் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. 

மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 10,000 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிர்ச்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 7520 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. 

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை 150-க்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை கோடிக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். முதல் அலை, இரண்டாவது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மூன்றாவது  அலை தீவிரமாகி உள்ளது. இந்நிலையில் தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரசை கட்டுப்படுத்த முடியும் என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில்தான் மருத்துவத்துறைக்கு சவால் கொடுக்கும் வகையில் ஒமிக்ரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. முதல் அலை, இரண்டாவது அலையைக் காட்டிலும் தற்போது பரவி வரும் மூன்றாவது அலை மின்னல் வேகத்தில் மக்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஆனால் யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  கடந்த சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது அது மீண்டும்  ஏறு முகத்தை கண்டுள்ளது.

எனவே வைரஸை கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை என பல்வேறு நகரங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையை பொருத்தவரையில் வைரஸ் தொற்றின் தாக்கும் எகிறி வருகிறது என்றே சொல்லலாம், குறிப்பாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டில் ஏழு நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், மருத்துவ ஆலோசனை வழங்கவும் மருத்துவ குழுக்கள் பணியாற்றி வருகின்றன. கொரோனா தொற்று உறுதியானவர்கள் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உதவ களப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இப்படிப் பல்வேறு  தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுவரினும் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15மண்டலங்களில் 10 ஆயிரம் தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 7520 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தளர்வுகள் இன்றி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அதன்படி, சென்னையில் 10 ஆயிரம் தெருக்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 1735 தெருக்களில் தலா 5 நபர்களுக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். 6638 தெருக்களில் தலா 3 நபர்களுக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதன் படி, மொத்தம் 10 ஆயிரத்து 8 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவித்துள்ளது. 
 

click me!