மதமாற்ற தடைச் சட்ட கோரிக்கை.. மண்ணைக் கவ்விய ஜெயலலிதா.. பரிசீலிப்பாரா பதுங்குவாரா ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2022, 2:00 PM IST
Highlights

அந்த மாணவி மதமாற்றம் செய்ய பள்ளி மற்றும் விடுதி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகவும், மாணவி அதை ஏற்காததால் குறி வைக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக பட்டாரென்றும், அதனால்தான் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்றும், முழுக்க முழுக்க  மதமாற்றம் நடவடிக்கையால் மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் பாஜகவினர் போர் குரல் எழுப்பியுள்ளனர். 

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள்  மதமாற்ற தடை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.

எதற்காக இந்த மதமாற்ற தடை சட்டம்  அதன் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, குடியரசு நாடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25 (1) இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் மதச் சுதந்திரத்தை அனுபவிக்கவும், கடைப்பிடிக்கவும், பரப்பவும் எல்லோருக்கும் சம அளவு உரிமை உண்டு என கூறுகிறது.  சிறுபான்மையினருக்கு தங்கள் கலாச்சாரத்தை காத்துக் கொள்ளவும், கல்வி நிறுவனங்களை அமைத்து நிர்வாகம் செய்யவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டங்கள் அருணாச்சல பிரதேசம், குஜராத், ராஜஸ்தான்,  மத்திய பிரதேசம்,  ஹிமாச்சல் பிரதேஷ், சத்தீஸ்கர், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் உள்ளது.

தமிழ்நாட்டில் 2002 ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு நபர் மற்றொரு நபரை ஆசை காட்டியோ, அன்பளிப்பு கொடுத்தோ, மிரட்டியோ அல்லது பயமுறுத்தியோ மதமாற்றம் செய்தால் அந்த நபருக்கு மூன்று ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம் என சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது சட்டமாக்கப்பட்டது. மேலும் மதம் மாற்றப்பட்ட நபர் மைனராகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது தாழ்த்தப்பட்டவராகவோ இருந்தால் மதம் மாற்றியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம். மதம் மாற்றும் சடங்கை செய்தாலோ அல்லது அச்சடங்கு பற்றி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படலாம் இவை அனைத்தும் பினைத்தொகை தொகை செலுத்தி வெளிவர முடியாத குற்றங்களாகும் என வரையறுக்கப்பட்டது.

ஆன்மிகம் என்பது மனித உள்ளத்தில் ஏற்படும் மாற்றமாக இருக்க வேண்டுமே தவிற, சில சலுகைகளுக்காக மதமாற்றம் செய்யக்கூடாது என்ற நோக்கங்களுக்காக இதை கொண்டுவருவதாக அப்போதைய முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா அறிவிப்பு செய்தார். அதைத்தொடர்ந்து 2004ஆம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபின் ஜெயலலிதா இச்சட்டத்தை திரும்பப் பெற்றார், மதமாற்ற தடை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டுவரப்பட்டது என்றும், குறிப்பாக இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கோரி வந்த நிலையில் அதை ஜெயலலிதா சட்டமாக்கியது இஸ்லாமிய கிறிஸ்தவ சிறுபான்மையின மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவே 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோல்விக்கு காரணமாக வும் கூறப்பட்டது. எனவேதான் ஜெயலலிதா அவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அச்சட்டத்தை திரும்பப் பெற்றார். குறிப்பாக இந்த சட்டம் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைக்கும் சட்டமாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் பிரச்சாரம் செய்து மக்களை மதம் மாற்றுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அது தமிழகத்திற்கு ஒத்துவராது என பின்னவாங்கப்பட்டுள்ளதே தமிழகத்தின் வரலாறாக உள்ளது.  இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மதமாற்ற தடை மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அம்மாநிலத்தில் இச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பட்டியல் இனத்தவர்களும், ஏழைகளும் அதிக அளவில் மத மாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்துவருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பாஜக அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் அங்கு சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இது நடைமுறையில் இருந்து வருகிறது.

இதேபோல கடந்த ஆண்டு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் இமாச்சல் ஆகிய மாநிலங்கள் மதமாற்ற தடை சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது திருமண நோக்கத்திற்காக மட்டும் மதம் மாறுவதை தடுக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது . மேலும் பல்வேறு சரத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளது. பெரும்பாலும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில்தான் தமிழகத்திலும் தற்போது அந்த கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எழுப்பத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷினரிகள் பல்வேறு வகைகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை குறிவைத்து மதம் மாற்றி வருவதாகவும் குற்றசாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம்  மீண்டும் மதமாற்ற தடைச் சட்ட கோரிக்கைக்கு துருப்புச் சீட்டாக மாறியுள்ளது.

அந்த மாணவி மதமாற்றம் செய்ய பள்ளி மற்றும் விடுதி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகவும், மாணவி அதை ஏற்காததால் குறி வைக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக பட்டாரென்றும், அதனால்தான் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்றும், முழுக்க முழுக்க மதமாற்றம் நடவடிக்கையால் மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் பாஜகவினர் போர் குரல் எழுப்பியுள்ளனர். மக்களின் வறுமையைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்யும் வேலை நடந்து வருகிறது என்றும், அதற்கு லாவண்யாவின் மரணமே சாட்சி என்றும் குற்றம்சாட்டும் பாஜக தலைவர்கள், இதுபோன்ற அவலங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் கட்டாயம் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக ஆரம்பம் முதல் இருந்தை இந்த சட்டத்திற்கு ஆதரவும் இன்றி எதிர்பும் இன்றி இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிறுபான்மையின மக்களின் காவலன் என்ற பிம்பத்துடன் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் வாக்கை அறுவடை செய்யும் கட்சியாகவும் இருந்து வருகிறது. ஏற்கனவே மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்து ஜெயலிலிதா மண்ணைக் கவ்விய வரலாறு தமிழகத்திற்கு உள்ளது. எனவே முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையே பரிசீலிப்பாரா அல்லது கண்டும் காணாமல் பதுங்குவாரா என்ற கேள்வியே எழுந்துள்ளது. 
 

click me!