டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தி கடந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா கொண்டாட்டம்
டெல்லியில் குடியரசு தின விழா 26ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். முன்னதாக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கொடியேற்றி வைப்பார். இதனை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் வலிமையை பிரதிபலிக்கும் வகையில் ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு, ராணுவ தளவாடங்களில் அணிவகுப்பு நடைபெறும். அத்துடன் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும். கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்தில் இருந்து ஊர்தி கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்து. இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் பிரச்சனையை உருவாக்கியது.
அலங்கார ஊர்தி தேர்வு
தமிழக அரசு ஏற்பாடு செய்த ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வா.உ.சி, வீரமங்கை வேலு நாச்சியார் உள்ளிட்ட சுதந்திர போராட்டத்திற்காக போராடிய தலைவர்கள் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்த நிலையில் தமிழகம் முழுவதும் அலங்கார ஊர்திகளை கொண்டு செல்லவும், சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் இந்தாண்டு குடியரசு தின விழாவிற்கு அலங்கார ஊர்திகளை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருந்தது. அந்த வகையில் அனைத்து மாநிலங்களையும் அலங்கார ஊர்தி மாதிரி படங்களை அனுப்பி வைக்க கோரியிருந்தது.
தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி
அந்த வகையில், இந்தாண்டு 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது..குறிப்பாக, ஏழு கட்டமாக நடைப்பெற்ற தேர்வுகளில் இறுதியாக ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், குஜராத், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
சூப்பர் ஸ்டார் பட்டம் நிரந்தரமில்லை..! ரஜினி ரசிகர்களின் செயல் நாகரிகமற்றது..! சீமான் ஆவேசம்