ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். இங்கே கட்சியினர் இரண்டு பட்டு நிற்கிறார்கள். கொண்டாட்டமோ கூத்தாடிக்கு என்றாலும், இரண்டு பட்டு நிற்பவர்களுக்கு எத்தகைய பாதகம் ஏற்படும்!அவரவர் கட்சியில் தங்கள் ஆளுமையைச் செலுத்த, ஒருவரை ஒருவர் நீக்கி வருகிறார்கள். உண்மையில் இதன் பின்னணிதான் என்ன?இப்போதும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றுதான் பதியப் பட்டிருக்கிறது. அந்த இணையதளத்தில், அதிமுக அம்மா அணி என்றோ, அதிமுக புரட்சித் தலைவி அணி என்றோ காட்டப் படவில்லை. ஆனால், அண்ணா திமுக அலுவலக உறுப்பினர்கள் பட்டியலில், பொதுச் செயலாளர் என்ற பதவியின் குறிப்பில், அது சர்ச்சையில் உள்ளது (டிஸ்ப்யூட்) என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தபோது, அதுவரை அதிமுக எங்களுக்குதான், சபாநாயகர் எங்களுடன் உள்ளார், பொதுச் செயலாளர் எங்களுடன் உள்ளார் என்றெல்லாம் இரு தரப்பும் மாறி மாறிக் கூறிவந்தபோது தான், கட்சி குறித்து பிரச்னை வந்தது. அப்போது, இரு தரப்பும் அதிமுக., என்ற பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த தடை வந்தது. எனவே, அதிமுக., அம்மா அணி என்றும், அதற்கான தொப்பி சின்னமும் தினகரன் பேரில்தான் ஒதுக்கப் பட்டது. டிடிவி தினகரன் பேரில்தான் கடிதமும் கொடுக்கப் பட்டது. அடுத்து அதிமுக புரட்சித் தலைவி அணி என்றும் சின்னமும் ஒதுக்கப்பட்டு மதுசூதனன் பெயருக்கு அளிக்கப் பட்டது. அதன் பின்னர் இருவரும் போட்டியிட அனுமதிக்கப் பட்டது. அந்த நேரத்திலும் அது குறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மாற்றம் செய்யப் படவில்லை. டிஸ்ப்யுட் எண் 2, 2017 என்று ஒரு உத்தரவு போடுகிறார்கள். இது தேர்தலுக்கான ஒரு வசதியாக அப்போதைக்கு ஏற்படுத்திக் கொள்ளப் பட்டது. ஆனால், தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்து செய்யப் பட்டது. எனவே, அந்தத் தேர்தல் ரத்து அறிவிப்புடன் அதிமுக அம்மா அணி என்றோ, புரட்சித் தலைவி அணி என்றோ குறிப்பிடப் படுவதும் நுட்பமாகப் பார்த்தால் ரத்தாகிப் போனதுதான் பொருள். தேர்தல் ஆணையத்தால், தினகரனுக்கும், மதுசூதனுக்கும் வழங்கப்பட்ட கடிதமும் அந்தத் தேர்தல் ரத்துடன் வாபஸ் ஆனது என்றுதான் பொருள்.ஆனால், இரு தரப்பும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு, குழு அரசியல்தான் நடத்திக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, தனித்தனி கட்சியாகவோ, அணியாகவோ இல்லை என்றுதான் பொருள். அப்படிப் பார்க்கும் போது, இரு அணிகள் இணைப்பு என்பதும் ஒரு கண் துடைப்புதான். நுட்பமாகப் பார்த்தால், கோஷ்டிகள் கலந்தன என்று வேண்டுமானால் கொள்ளலாம்.எனவே, நியாயப் படி பார்த்தால், இப்போது இருப்பது அண்ணா திமுக., தான்! கட்சியின் சின்னம் முடக்கப்பட்டும், அதற்கான பொதுச் செயலாளர் பதவி சர்ச்சையிலும் உள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இன்னும் சசிகலாவை பொதுச் செயலாளர் என்று ஏற்காத நிலையில் அப்படியே வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்பதில் அந்தக் கட்சியினர் ஈடுபட்டால், நிச்சயம் அது மட்டும் மாற்றப்படக் கூடும்.எனவே, அதிமுக என்ற கட்சியின் அலுவலக பொறுப்பாளர்கள், அதாவது அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்ட நிலையில் எப்படி இருந்ததோ, அதுதான் இப்போதும் செல்லுபடியாகும். கொறடா என்பது கட்சிப் பொறுப்பு அல்ல. அது அவை உறுப்பினர்களால் கூடி தேர்ந்தெடுக்கப்படும் பதவி. எனவே அது நியமனப் பதவிதான். கொறடா ஒரு உத்தரவு கொடுத்தால் அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர் சபாநாயகர். ஆனால், கொறடா உத்தரவு பிறப்பித்தும் சபாநாயகர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அது அவ்வளவுதான். அது பின்னர் எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது. இந்த விவகாரத்தில், கொறடாவின் ஷோகாஸ் நோட்டீஸ் என்பது ஒருவகையில் பார்த்தால், சட்டப்படி சரியானதுதான். நடவடிக்கை எடுக்கும் முன்னர் அவர் கருத்தைக் கேட்க வேண்டும் எனும் வகையில், அதாவது பிரின்சிபல்ஸ் ஆஃப் நேச்சுரல் ஜஸ்டிஸ் எனும் வகையில், இது சரியானதாகத்தான் அமையும். ஆனால், கருத்தைக் கேட்டுவிட்டு அவர் சும்மா இருந்து விடவும் வாய்ப்பு உண்டு. தற்போது தினகரன் ஆதரவாளர் ஒருவர், அம்மா அணியில் கொறடா என்று யாரையும் நியமிக்கவில்லை என்று கூறுகிறார். சொல்லப் போனால், அம்மா அணி என்ற ஒன்றே இப்போது இல்லை. அதற்கு யாரும் க்ளாரிபிகேஷன் பெட்டிஷன் எனும் வகையில் விளக்க மனு கோரி போடவில்லை. சும்மா அம்மா அம்மா என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பெருங்குழப்பம் தான்.இந்தக் குழப்பம் தீர வேண்டுமென்றால், தேர்தல் ஆணையத்தில் இவர்கள் யாரேனும் க்ளாரிபிகேஷன் பெட்டிஷன் போட்டு, தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தக் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ள அவர்களே விரும்பவில்லை என்று தான் தோன்றுகிறது. உண்மையில், கட்சியில் ஏற்படும் குழப்பத்தைத் தீர்க்க விரும்பாமல் இந்தக் குழப்பத்தை நீட்டிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது.சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிமுக., அம்மா அணி என்றோ, புரட்சித் தலைவி அணி என்றோ பிரியவில்லை. அதிமுக., பெயரில் தான் சட்டமன்றத்தில் கொறடாவும் (ராஜேந்திரன்), சட்டமன்ற குழுத் தலைவவரும் (எடப்பாடி பழனிச்சாமி) இருக்கிறார்கள். கொறடா ஒரு உத்தரவு போட்டு அதை மீறினார்கள் என்றால், அவர் கட்சித் தாவல் சட்டப்படி, உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இந்த விவகாரத்தில், 19 உறுப்பினர்கள் மீது கொறடா எந்த உத்தரவும் போடவில்லை. உத்தரவு போடாமல் அவர் மீறினார் என்று கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் முடியாது. மேலும், அவர்கள் யாரும் கட்சியும் தாவவில்லை. உள்கட்சி ஜனநாயகம் என்பது கட்சிக்குள் இருக்க வேண்டும் என்பதை எடியூரப்பா வழக்கில் முன்னர் சொல்லப்பட்டது. உள்கட்சிக்குள் குரல் எழுப்புவது என்பது கட்சி ஜனநாயகம் என்பது சொல்லப்பட்டது. கட்சிக்குள் எதிர்த்துக் கருத்து சொல்வது கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் வராது என்பது 2010 ஆம் ஆண்டில் எடியூரப்பா விவகாரத்தில் தெளிவாக்கப்பட்ட ஒன்று. ஆனால், தன்னை மீறி, தனக்குத் தெரிவிக்காமல், ஆளுநரிடம் சென்று மனு கொடுத்தார்கள் என்று இவர்கள் சொல்லலாம். ஆனால், ஆளுநரிடம் ஆதரவுக் கடிதம் கொடுக்கும் போதே, ஆதரவு விலகல் எனும் கடிதத்தைக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும். இருப்பினும், இது சட்ட விவகாரங்களுக்கும் வரும் விஷயம் என்பதால், நீதிமன்றத்துக்குச் சென்றால், இது நிச்சயம் பல வருடங்களுக்கு இழுத்துச் செல்லக் கூடும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்த விஷயத்தில் ஒரே தீர்வு என்பது, அனைத்து உறுப்பினர்களும் அனுசரித்துச் செல்வதுதான். ஆனால், 19 உறுப்பினர்களும் ராஜினாமா செய்யும் பட்சத்தில், உறுப்பினர் எண்ணிக்கை குறையும் என்பதும், எதிர்க்கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால், இந்த 19 பேர் எண்ணிக்கை குறைந்து, அரசுக்கான பெரும்பான்மை தேவை பலமாக 107 உறுப்பினர் ஆதரவு போதும் என்பதும் ஒரு கணக்காக உள்ளது.எனவே, இந்த 19 பேர் எடுக்கும் முடிவில்தான், அவர்களின் எதிர்காலம் உள்ளது என்பது கண்கூடு! தங்கள் தலைமீதே தாங்கள் மண்ணை வாறி இறைத்துக் கொள்வார்களா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.