
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது.
போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற ஒரு நபர் விசாரணை கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. ஒரு நபர் விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு பற்றி தேசிய மனித உரிமை ஆணைய குழுவும் விசாரணை நடத்தியது. இது தொடர்பான அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை விசாரிக்க, தடய அறிவியல் நிபுணர்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், மக்கள் அரசு கட்சி தலைவர் ரஜினிகாந்த் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரிக்கக்கோரி அதில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மனு மீதான விசாரணையின்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியானதாக இருக்கும் என்று கூறினார். மேலும் சிபிஐ-யை அணுகவும் மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில், ஏற்கனவே ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடியும் வரை எவ்வித நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் சிபிஐ விசாரணைக்கு தேவையில்லை என்றும் வாதிடப்பட்டது.