மதுரை விமானம் நிலையம் அருகே அதிமுக மாநாடு நடைபெற இருப்பதால் மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 20ல் அதிமுக மாநாடு
அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக ஓபிஎஸ் தனித்து விடப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிமுகவின் மாநில மாநாடு நடத்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன் படி ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக மாநாடு நடத்த சுமார் 3 மாதங்களாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாநாடுக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அதிமுகவினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. சிவகங்கையைச் சேர்ந்த சேது முத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி மனு
அந்த மனுவில், அதிமுக மாநாடு மதுரை விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளது. ஆனால், மதுரையில் நடத்தப்படும் அதிமுக மாநாட்டுக்கு விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மேலும் மாநாடு நடைபெறும் நேரத்தில் பட்டாசு அதிகளவில் வெடிப்பார்கள் என்பதால் விமான போக்குவரத்திற்கும் ஆபத்து உள்ளது. மேலும் மாநாட்டுக்கு ஏராளமானோர் வருவதால் முக்கிய சாலை அமைந்துள்ள பகுதியில் பெருமளவுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அதிமுகவின் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
தள்ளுபடி செய்த நீதிபதி
இந்தநிலையில் இந்த மனு தொடர்பாக வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் நான்கு மாதத்திற்கு முன் மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளனர், கடைசி நேரத்தில் தடை கோரினால் எவ்வாறு கொடுக்க முடியும். கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்தது ஏன் என கேள்வி எழுப்பியவர், விளம்பர நோக்கத்திற்கான மனு தாக்கல் செய்தீர்களா எனவும் விசாரணை நடத்தினார். முன்னதாக மாநாட்டில் வெடிபொருட்களோ பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் அதிமுக தரப்பு உறுதி அளித்தது. இதனையடுத்து அதிமுக மாநாட்டுக்கு தடை கேட்டு தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.