தமிழகத்தில் 6 முறை ஆட்சி செய்து 5 மருத்துவ கல்லூரிகளை தான் திமுக கொண்டுவந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி அதிகளவு மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு தந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு அச்சம்- மாணவர் தற்கொலை
நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தமிழகத்தில் தொடர்வதால் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மற்றும் திமுக சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கும் , குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசு நீட் தேர்வுக்கு எதிராக எந்த வித முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது. இந்தநிலையில் தான் கடந்த வாரம் ஆளுநர் ரவியிடம் பெற்றோர் சார்பாக நீட் தேர்வு ரத்து மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கப்படுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் நீட் தேர்வு மசோதாவிற்கு நானாக இருந்தால் ஒப்புதல் கொடுக்க மாட்டேன் என தெரிவித்து இருந்தார்.
திமுக உண்ணாவிரத போராட்டம்
இந்தநிலையில் ஆளுநர் பேச்சு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாணவர்கள் ஒருவர் நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த வேதனை தாங்காமல் அவரது தந்தையும் அடுத்த தினமே தற்கொலை செய்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் ஆளுநர் பேச்சை கண்டித்தும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும் திமுக சார்பாக உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கன்னியாகுமரியில் நடை பயணம் மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு இல்லையென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பில்லை
இது தொடர்பாக அவர் பேசுகையில், தமிழ்நாடு கலாச்சாரத்தில் ஆணிவேரே குடும்பம் தான் அந்த குடும்ப ஆட்சியே தற்போது திமுக தான் என விமர்சித்தார். தமிழகத்தில் இது வரை 6முறை ஆட்சி செய்தபோது 5 மருத்துவ கல்லூரிகளை தான் திமுக ஆட்சி தந்துள்ளதுள்ளது. ஆனால் பிரதமர் மோடி அதிகளவு மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு தந்துள்ளார். 30 ஆயிரம் கோடி ஊழல் என குடும்ப ஆட்சிக்கு எதிராக பேசிய அமைச்சர் பி டி ஆரை நிதி அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு ஏன் டம்மி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வும், தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நீட் இருக்கும். நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது திமுகவின் பித்தலாட்டத்தால் நீட்டை தடுத்து நிறுத்த முடியாது என அண்ணாமலை தெரிவித்தார்.