அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலையில் பலகோடி ரூபாய் ஊழல்..! சி.ஏ.ஜி அறிக்கையில் பரபரப்பு தகவல்

By Ajmal KhanFirst Published Oct 20, 2022, 11:38 AM IST
Highlights

அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11.41 கோடி முறைகேடு நடந்திருப்பது கணக்கு தணிக்கைத் துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 

அண்ணா பல்கலை. மோசடி

தமிழக சட்ட பேரவையில் இந்திய தணிக்கை துறை அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில்  மாணவர்களின் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வெற்று சான்றிதழ் அச்சடிப்பதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் கடந்த 2016ம் ஆண்டு  பிப்ரவரி மாதம், மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள், மதிப்பெண் தாள்கள் மற்றும் மதிப்பீட்டுத்தரம் உள்ளிட்ட தொகுப்பு விவர அறிக்கை ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என துணை வேந்தரிடம் முன்மொழிந்தார். இந்த பணிக்காக, ஜிஎஸ்டி லிமிட்டெட், மேட்ரிக்ஸ் இன்க் ஆகிய 2 நிறுவனத்துடன் ரூ.11.41 கோடியில் தேர்வு கட்டுப்பாட்டாளர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! கொலை வழக்கு பதிவு செய்து இபிஎஸ்யை கைது செய்ய வேண்டும்..! - எதிர்கட்சிகள்

இந்தநிலையில், பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக துணை வேந்தருக்கு சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில் மதிப்பிடப்பட்ட செலவைக் குறிப்பிடாமல், நிதி மற்றும் கணக்கு கையேட்டில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை தேர்வு கட்டுப்பாட்டாளர் மீறியுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவாளர் மற்றும் கொள்முதல் குழுவால் செய்யப்பட வேண்டிய ஒப்பந்த வழங்கல் முடிவை மீறி, தேர்வு கட்டுப்பாட்டாளரே ஒப்பந்தம் வழங்கியுள்ளார். மேலும், ஏல மோசடி செய்யப்பட்டதற்கான ஆதாரங்களையும், கார்டலைசேஷன் மூலம் தணிக்கை கண்டறிந்துள்ளது.

இபிஎஸ்க்கு குடைச்சல் கொடுக்கும் ஓபிஎஸ்...! 5 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி

இதில், பல்கலைக்கழகத்திலே இல்லாத கல்விப் பதிவேடுகளின் நகல்களை டிஜிட்டல் செய்யப்பட்டதற்கு, ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவுகளில் இருந்து ஜிஎஸ்டி நிறுவனம் மூலம் 7,33,722 பதிவுகள் மட்டுமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், 20,92,035 பதிவுகளை டிஜிட்டல் செய்ததாக அந்த நிறுவனத்துக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எந்த பதிவையும் டிஜிட்டல் செய்யாத மேட்ரிக்ஸ் இன்ங்  நிறுவனத்துக்கு 1,20,000 பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக பணம் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், வழங்கப்படாத சேவைகளுக்காக, ஒப்பந்ததாரருக்கு ரூ.11.41 கோடி பணம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், போலிச் சான்றிதழ்கள் அச்சிடப்படுவதை தடுக்கும் வகையில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வெற்றுச் சான்றிதழ்களை அச்சிடுவதற்கு தேர்வு கட்டுப்பாட்டாளரால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக்குழுவின் முன்மொழிவுக்கு, துணைவேந்தரின் பணியை ஆற்றி வந்த ஒருங்கிணைப்பு குழு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த பணிக்காக ஐஎஃப்எஃப் லிமிட்டட் என்ற நிறுவனத்துக்கு ரூ.65.46 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்நிலையில், இந்நிறுவனமும், ஜிஎஸ்டி நிறுவனமும் சகோதர நிறுவனம் என தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிறுவனம், ரூ.57.14 கோடி மதிப்பில் அதிகளவிலான வெற்றுச் சான்றிதழ்களை கொள்முதல் செய்துள்ளது. இதில், சான்றிதழின் வடிவத்தை மாற்றியதால், ரூ.24.50 கோடி மதிப்பிலான சான்றிதழ்கள் பயன்படுத்த முடியாததாகிவிட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

இது மட்டும் இருந்திருந்தால் நான் அப்பவே முதலமைச்சர் ஆகியிருப்பேன்...! சரத்குமார் ஆதங்கம்

click me!