ரூபாய் நோட்டு தடை துணிச்சலான நடவடிக்கை - மோடிக்கு  பிரணாப்முகர்ஜி புகழாரம்

First Published Feb 1, 2017, 2:08 AM IST
Highlights
பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதல்(சர்ஜிகல் ஸ்டிரைக்), கருப்புபணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டு தடை  ஆகியவை நாட்டின் நலனுக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்த துணிச்சலான நடவடிக்கை என குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டினார்.

கூட்டுக்கூட்டம்

ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பட்ஜெட்கூட்டத்தொடரின் தொடக்க நாளில் இரு அவை உறுப்பினர்களையும் ஒன்றாக அழைத்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கூட்டுக்கூட்டத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது-

வரலாற்று முக்கியத்துவம்

பொது பட்ஜெட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டதும், ரெயில்பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டோடு இணைத்ததும் வரலாற்று சிறப்பு வாய்ந்த விசயமாகும். நம்முடைய ஜனநாயகத்தையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

ஏழைகளுக்காக

இந்த அரசின் முக்கியக் கொள்கைகள் அனைத்தும் ஏழைமக்களுக்காகவும், தலித்களுக்காகவும், சமூகத்தில் நலிந்த பிரிவினருக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழைமக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் விதமாக செயல்படுகிறது. விவசாயிகளின் வாழ்க்கை நிலை முன்னேறி வருகிறது.

விலைவாசி கட்டுப்பாடு

நாட்டில் உள்ள உணவுதானிய பொருட்கள்,  பருப்பு வகைகள் விலைகளை கட்டுப்படுத்த இந்த அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுதந்திரமடைந்தபின்னும் இருந்த 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

13 ஆயிரம் கோடி

26 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கிக்கணக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமூக நீதி திட்டங்களில் மூலம் 13 ஆயிரம் கோடி மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

11 ஆயிரம் கிராமங்கள்

பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.2. லட்சம் கோடி கடன் 5.6 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஜல் அவாஸ் திட்டத்தின் கீழ் 3 கோடி கழிப்பறைகளை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவைச் சேர்ந்த 37 சதவீதம் பெண்களுக்கு கியாஸ் சிலிண்டர் அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தீனதயால் உபாத்யாயா திட்டத்தின் கீழ் 11 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதி செய்யப்பட்டுள்ளது.

3 கோடி கிசான் கார்டு

விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக கடன் திட்டங்கள், நீர்பாசனத் திட்டங்கள், மண் வளப் பரிசோதனைத் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. 3 கோடி விவசாயிகளுக்கு கிசான்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரூ.6 ஆயிரம் கோடி திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் பெரும்பாலும் பயன் பெறுபவர்கள் பெண்கள் ஆவர். விவசாயம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் 42 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

துணிச்சலான நடவடிக்கை

தீவிரவாதத்தையும் ஒழிப்பது, கருப்பு பணத்தை அழிப்பது போன்றவற்றில்  இந்த அரசு துணிச்சலான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எல்லையில் எதிரிநாட்டு படைகள் அத்துமீறிய போது தகுந்த பதிலடியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி ‘சர்ஜிகல்ஸ்டிரைக்’ நடத்தி, எல்லையின் இறையான்மையை நிலைநாட்டியுள்ளது. இந்த வீரச் செயல் புரிந்த ராணுவ வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள், போற்றக்கூடியவர்கள்.

ஒரே நேரத்தில் தேர்தல்

அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் வளர்ச்சித் திட்டங்கள் தேங்குகின்றன, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கிறது. ஆதலால், சட்டபேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும். அதை நான் வரவேற்கிறேன்.தேர்தல் நேரத்தில் முறைகேடாக பணம் பயன்படுத்துவதை ஒழிப்பது குறித்தும் விவாதம் நடத்தப் பட வேண்டும். இந்த விவாதங்களுக்கு பின் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

click me!