
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன.
இவ்வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் நீதிபதி விடுவித்தார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனாலும் மேல்முறையீடு செய்யப்படும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 6-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து உடல்நலம் விசாரித்தார்
இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும், காங்கிரஸ் ஏற்றதாக தெரியவில்லை. மேலும் மோடிக்கு எதிராக நடைபெற இருந்த போராட்டத்தையும் ஸ்டாலின் மழையை காரணம் காட்டி தள்ளிவைத்தார்.
ஆனால் காங்கிரஸ் திமுகவின் உத்தரவை மதிக்காமல 2 இடங்களில் போராட்டம் நடத்தியது. மொத்தத்தில் மோடியின் சென்னை வருகை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 2 ஜி வழக்கில் கனிமொழிக்கு தண்டனை வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விடுவிக்கப்பட்டது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து பாஜகவின் எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் விரைவில் கூட்டணி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பொறுத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் திமுகவும் பாஜகவும் விரைவில் கூட்டணி அமைக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.