
மாநிலங்களவையில் முதன்முதலாக பேச முற்பட்ட சச்சின் டெண்டுல்கரை பேச விடாமல், காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு மாநிலங்களவையின் நியமன எம்பியாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தேர்தெடுக்கப்பட்டார். எம்பியாக தேர்வான பிறகு கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட மாநிலங்களவையில் சச்சின் டெண்டுல்கர் உரையாற்றியதில்லை. மாநிலங்களவை பக்கமே அவர் வராததால், அவரை நீக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்தன.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 5வது நாளான இன்று, சச்சின் டெண்டுல்கர் முதன்முறையாக பேச முற்பட்டார். ஆனால், குஜராத் தேர்தலின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி அவதூறாக பேசியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சச்சின் டெண்டுல்கர் பேச எழுந்தபோது, காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சச்சினால் பேச முடியவில்லை. மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்பிக்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், அவையை நாள் முழுதும் ஒத்திவைத்தார்.
கடைசிவரை சச்சினால் பேசமுடியவில்லை. கிரிக்கெட்டில் எத்தனையோ சதங்களை விளாசிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை நாடாளுமன்றத்தின் முதல் ஆட்டத்திலேயே டக் அவுட்டாக்கி காங்கிரஸ் எம்பிக்கள் வெளியேற்றினர்.