இதுக்குதான் இத்தன பில்டப்பா..? 10 ஆயிரம் பக்கம் எழுதி... 3 வாரத்துக்குள் 105 பக்கமா சுருங்கினது எப்படி?

First Published Dec 21, 2017, 3:53 PM IST
Highlights
10 thousand page was shrink by 105 pages verdict on 2g issue


டிச. 21 வியாழக்கிழமை இன்றைய ஹாட் டாபிக், 2ஜி முறைகேட்டு வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்புதான். இந்தத் தீர்ப்புக்காக வெகு நாட்கள் சிரமப்பட்டு தீர்ப்பை பக்கம் பக்கமாக எழுதி வந்ததால் தான் தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப் பட்டு வருவதாக நீதிபதி ஓ.பி.சைனி கூறி வந்தார். 

முன்னதாக,  2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு எப்போது அறிவிக்கப்படும் என்ற தேதி மீண்டும் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதன் பின்னணியில் தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜாவின் வாதங்களும் அவர் தரப்பில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களும் உள்ளதாகக் கூறப்பட்டது. 

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு விசாரணை ஏப்ரல் மாதமே முடிந்துவிட்டது. இது கிரிமினல் வழக்கு.  இதுபோன்ற கிரிமினல் வழக்குகளில் சிறு சந்தேகம் இருந்தாலும் அதை குற்றவாளிக்கு சாதகமாக அளிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் பார்வை. 

முன்னர், மாணவி ஆருஷி கொலை வழக்கில்கூட குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதாலேயே அந்த சந்தேகத்தின் பலனை ஆருஷியின் பெற்றோருக்கு அளித்து அவர்களை விடுதலை செய்தது நீதிமன்றம். 

இங்கே அலைக்கற்றை முறைகேட்டு வழக்கில், ஆ.ராசா தனக்கு சந்தேகத்தின் பலனைக்கூட கேட்கவில்லை. இந்தக் குற்றப்பத்திரிகையே தவறு எனக் கூறித்தான் வாதிட்டார். அதாவது, குற்றப் பத்திரிகையே தவறு என்று கூறி, வழக்கின் அடிப்படையையே கேள்விக்கு  உள்ளாக்கினார். ஒரு குற்றம் நடந்து, 'அதை நான் செய்யவில்லை' என்று சொல்வது ஒரு வகை. 'அப்படியொரு குற்றமே நடக்கவில்லை' என வாதிடுவது இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகையில்தான் வாதிட்டார் ஆ.ராசா. 

சர்க்காரியா ஊழல் வழக்கில், திமுக.,வினர் மீதான குற்றச்சாட்டில், விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார்கள் என்ற வார்த்தை, அன்று முதல் இன்று வரை அப்படியே ஒத்துப்  போகிறது. குற்றம் செய்வது தெரிகிறது. குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதை தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்க இயலவில்லை என்ற கதையாகத்தான் சிபிஐ.,யின் நிலை ஆகிப் போயுள்ளது. 

இந்த வழக்கு, நிர்வாக ரீதியிலானது என்றாலும் பெருமளவு தொழில்நுட்ப ரீதியில் அமைந்த நுட்பமான வழக்கு இது. மத்திய தணிக்கைக் குழு சிஏஜி., அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த வழக்கு தொடுக்கப் பட்டது. ஆனால், இந்த சிஏஜி அறிக்கையே தவறு என, வேரை வெட்டிவிட்டு மரத்தைச் சாய்க்கும் நுட்பத்தைத்தான்  ஆ.ராசா இங்கே பிரதானமாகத் தன் வாதங்களில் கையாண்டார். 

இதற்காக, 2010ல் தொலைத் தொடர்பு அமைச்சகம் எழுதிய பதில் கடிதங்களை ஆ.ராசா தனக்கு துணைக்கு வைத்துக் கொண்டார்.  அவற்றில், சிஏஜி.,யின் குற்றச்சாட்டு ஒவ்வொன்றையும் மறுதலித்து, அலைக்கற்றை குறித்த போதுமான சட்டப் புரிதலோ தொழில்நுட்ப அறிவோ இல்லாமல் தயாரிக்கப்பட்ட அறிக்கை இது. போதிய அறிவு இல்லாமல் தயாரிக்கப் பட்ட இந்த அறிக்கை தூக்கி எறியப்பட வேண்டியது என கடிதங்களில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இப்படி தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் இருந்து இதை எழுதிய உயரதிகாரிதான், சிபிஐ., தரப்பின் பிரதான சாட்சிகளில் ஒருவராக இருந்தார்.  இவர் சாட்சியளிக்க கூண்டில் நின்றபோது, அவரிடம் ஆ.ராசாவே குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது அவர், ‘சிஏஜி.,க்கு எழுதியுள்ள பதில்கள் உண்மைதான். பிரதமர் அலுவலகம் நிதியமைச்சகம் என அனைத்துத் தரப்போடும் ஆலோசித்து கூட்டு முடிவே எடுக்கப்பட்டது' என ஒப்புக் கொண்டார்.

இப்படி, தொலைத் தொடர்புத் துறைக்கும் சிஏஜி.,க்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருக்கும் விவரங்களை, சிபிஐ.,யின் காவலில் இருந்தபோதுகூட ஆ.ராசா சிபிஐ.,யிடம் தெரிவிக்காமல் மறைத்தார். சிபிஐ.,யும் இந்த ஆவணங்களைக் கைப்பற்றாமலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின் விசாரணை ஆரம்பித்த பிறகு, நீதிபதி முன் கடிதங்களை ஒவ்வொன்றாக வெளியில் விட்டார் ராசா.  

இந்தக் கடித ஆவணங்களின் படி, 2ஜி ஏல தேதியை முன்னதாகவே மாற்றியது, முதலில் வருபவருக்கே முன்னுரிமை தருவது, இரட்டைத் தொழில் நுட்பம் இப்படியாகக் கூறப்பட்ட சிபிஐ.,யின் குற்றச்சாட்டுகளுக்கு, தன் துறை தன்னிச்சையாக இயங்கவில்லை, பிரதமர் அமைச்சகம், நிதியமைச்சகம் இவற்றையும் சேர்த்துக்  கொண்டார் ஆ.ராசா. எனவே, ராசா கூறியோ, அல்லது கட்டாயப்படுத்தியோ 2ஜி விவகாரத்தில் முடிவுகள் எடுக்கப் பட்டதாக நிரூபிக்கப் போதுமான ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை.  

இந்த வழக்கைக் கையில் எடுத்த பிறகாவது, 'தொலைத் தொடர்பு அமைச்சரின் வற்புறுத்தல் மற்றும் கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாகவே, நான் இந்தக் கடிங்களை எழுத நேரிட்டது' என அந்த உயரதிகாரியிடம் சிபிஐ., வாக்குமூலமாகப் பெற்றிருக்க முடியும். ஆனால் அதையும் கோட்டை விட்டது.  இத்தகைய பின்னணியில் தான்,  ஆவணங்களைச் சரிபார்த்து, தரப்போகும் தீர்ப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் நியாயப்படுத்தி, 10 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக தீர்ப்பு தயாராகிறது என்பதால், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவதே ஒத்திவைக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டது.  

இந்நிலையில், அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 5ஆம் தேதிக்கு தீர்ப்பு குறித்த தேதி ஒத்திவைக்கப் பட்டது.  அப்போது, நீதிபதி ஓ.பி. சைனி, தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. மேலும் மூன்று வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தீர்ப்பு தேதி குறித்த அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் படுகிறது என்று கூறியிருந்தார். 

பின்னர் டிச.5ம் தேதி வந்து, மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறி, டிச.21 அன்று வெளியாகும் என்று கூறினார். ஆனால், டிச.5ம் தேதி அவர் குறிப்பிட்டபோது, இங்கே ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருந்தது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் நடக்கும் நிலையில், காலை 10.30க்கு 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டால்,  தேர்தலில் திமுக.,வுக்கு பாதகமாக இருக்கும் என்று திமுக.,வினர் பரவலாகக் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் தான், இன்று இந்தத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. ஆனால், 10 ஆயிரம் பக்கங்கள் என்பது வெறும் 105 பக்கங்களாக சுருங்கிப் போனது. அந்த 105 பக்கங்களும் டிச.5ம் தேதி தொடங்கி, டிச.21ம் தேதிக்குள்ளாக, அதுவும் மூன்று  வார காலத்துக்குள்ளாக சுருக்கம் கண்டு, அல்லது புதிதாக எழுதப் பட்டு இன்று வெளியாகியுள்ளது. இருப்பினும், அந்த 10 ஆயிரம் பக்கங்களில் என்ன இருந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் குடி கொண்டிருப்பதை நாம் யாரும் மறுக்க முடியாதுதான்!

click me!