அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து..!! முதல்வருக்கு வந்த அதிர்ச்சி கடிதம்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 29, 2020, 10:51 AM IST
Highlights

இந்நிலையில், தமிழக அரசு, மோட்டார் வாகன சட்ட விதிகள் 288ஏ - என்ற ஒரு  புதிய பிரிவை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், அரசு போக்குவரத்தின் ஒரு பகுதி வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க இச்சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது. 

அரசு போக்குவரத்து கழக வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க வழிவகுக்கும் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 288A - வை ரத்து செய்ய வேண்டும் எனவும், கொரோனா காலம் முழுவதும் சாலை வரியை ரத்து செய்யக்கோருவது தொடர்பாகவும் . மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுத்துயுள்ளார். அதன் முழு விவரம். 

கீழ்க்கண்ட இரண்டு முக்கிய பிரச்னைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதன் மீது தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். அரசு போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 48 ஆண்டுகளில் போக்குவரத்து கழகங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்று, தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு  முக்கிய பங்காற்றி வருகின்றன. தமிழகத்தில் உள்ள  அனைத்து கிராமங்களையும் (மலை கிராமங்கள் உள்பட) இணைக்கச் செய்யும் வகையிலும்  அரசு போக்குவரத்து கழகங்களின்  பேருந்துகள் சென்று வருகின்றன. மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட  சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு இலவச போக்குவரத்து சேவையை அரசு போக்குவரத்து கழகங்கள் தொடர்ந்து வழங்கி வருவது மட்டுமல்லாமல் சிறப்பான முறையில் தமிழக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன.

 

இந்நிலையில், தமிழக அரசு, மோட்டார் வாகன சட்ட விதிகள் 288ஏ - என்ற ஒரு  புதிய பிரிவை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், அரசு போக்குவரத்தின் ஒரு பகுதி வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க இச்சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது. மின்சார பேருந்துகளுக்காக இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது என்று கூறப்பட்டாலும் கூட இது அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். அரசுப்போக்குவரத்து கழகங்களின் வழித்தடங்களில் தனியார் வாகனங்களை அனுமதித்தால் அரசு போக்குவரத்து கழகங்கள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். பொது போக்குவரத்தையே பெரிதும் நம்பியிருக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, மோட்டார் வாகன சட்டம் 1988ல் செய்துள்ள விதித் திருத்தத்தை  ரத்து செய்து,  அரசு பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தங்களை கேட்டுக்கொள்கிறோம். 

பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்குவதற்கு சாலை வரியை செலுத்த வேண்டும் மோட்டார் வாகன சட்டப்படி ஒரு வாகனம் 10 நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலை ஏற்பட்டால் வாகனம் இயங்காத காலத்திற்கு சாலை வரி  ரத்து செய்யப்பட வேண்டும்.  மார்ச் 24ஆம் தேதி முதல் மே 18 முடிய வாகனங்களை முற்றிலும் இயக்கக் கூடாது  என அரசே தடை விதித்திருந்த  நிலையில், அந்த காலகட்டத்திற்கு வசூலிக்கப்பட்ட சாலை வரி திரும்ப வழங்கிட வேண்டும்.  சாலை வரியை திரும்ப வழங்குவதற்கு பதிலாக, அடுத்து செலுத்தவேண்டிய தவணைக்கான சாலை வரியை செலுத்த வேண்டுமென  நிர்ப்பந்தம் செய்வதாக வாகன உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.  எனவே, வாகனங்கள் இயல்பாக ஓடும் நிலை வரும் வரை வாகன வரியை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். என அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. 
 

click me!