2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம்... எப்படி என விவரிக்கும் ஜி.ராமகிருஷ்ணன்.!

By Asianet TamilFirst Published Sep 22, 2021, 9:03 PM IST
Highlights

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வருகின்றன. வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

மன்னார்குடியில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை செப்டம்பர் 27 அன்று நடத்த உள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது. இந்தப் போராட்டம் வேளாண் சட்டங்களை மட்டும் எதிர்த்து நடைபெறவில்லை. லிட்டர் பெட்ரோல் ரூ.42-க்கு விற்க முடியும் என்ற சூழல் உள்ளபோதிலும், மத்திய அரசு கலால் வரியை ரத்து செய்யாததால் விலை ரூ.100-ஐத் தொட்டுவிட்டது. பெட்ரோலுக்கு நிகராக டீசல் விலை உயர்ந்துவிட்டது. 
இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலையேறி வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்யவுமே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு அனைத்துத் தரப்பும் ஆதரவளிக்க வேண்டும். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வருகின்றன. வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகக் கூறியது. ஆனால், மத்திய கால கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் விட்டுவிட்டனர். எனவே, மத்திய கால கடனை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும். நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரிய தீர்மானத்துக்கு அதிமுக ஆதரித்தது வரவேற்கத்தக்கது. ஆனால்,  வேளாண் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்து, பாஜகவுக்கு அதிமுக ஆதரவுக் கரம் நீட்டியது. அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பதை  சட்டப்பேரவைத் தேர்தலே உணர்த்திவிட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்றபோதும், குறைவான இடங்களிலேயே இடதுசாரிகள் வென்றது குறித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.” என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

click me!