சேகர் ரெட்டியின் டைரி.. ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட 12 மாஜிக்களுக்கு வருமான வரித்துறை சம்மன்.. அலறும் அதிமுக.!

By Asianet TamilFirst Published Sep 22, 2021, 8:55 PM IST
Highlights

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீசெல்வம், எடப்பாடி பழனிசாமி உள்பட 12 முன்னாள் அமைச்சர்களுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
 

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டிக்கு தொடர்புடைய இடங்களிலும், அவருடைய உறவினர் சீனிவாச ரெட்டி வீட்டிலும் கடந்த 2017-இல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, வேலூர் உள்பட பல இடங்களில் நடந்த இந்த ரெய்டில் ரூ.147 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்தப் பணத்தில் ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தன. மேலும்  178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.
2016-இல் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சட்ட விரோதமாகப் பதுக்கியதாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை வழக்குப் பதிவு செய்தன. ஆனாக், இதில் சேகர் ரெட்டி மீது சிபிஐ பதிவு செய்த 3 வழக்குகள் மீதும் ஆதாரங்கள் இல்லை என முடித்து வைக்கப்பட்டுவிட்டன. அதேவேளையில் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தபோது ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது.
அந்த டைரியில் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உள்பட 12 பேரின் பெயர்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. இவர்களுக்குப் பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பாகவும் டைரியில் விவரங்கள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அந்த டைரியை ஆதாரமாக வைத்து  முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, உள்பட முன்னாள் அமைச்சர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், தற்போது திமுக அமைச்சரவையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கும் இந்த சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்மன் தொடர்பாக அதிமுக வட்டாரங்கள் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக அரசு, முன்னாள் அமைச்சர்கள் மீதி இடைவெளி விட்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் மூலம் சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசமைப்பும் சம்மன் அனுப்பியிருப்பது அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 

click me!