மாட்டடி அல்ல.. காட்டடி... பாலமேடு ஜல்லக்கட்டில் பந்தாடிய அமைச்சர் மூர்த்தியின் அடிப்பொடிகள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 18, 2022, 3:47 PM IST
Highlights

வேறு சில பெயர்களில் டீ- சர்ட் அணிந்து மாடுபிடி வீரர்கள் உள்ளே புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு வீரர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். 

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் அடிதடி, ஆள்மாறாட்டம், போலீஸ் தடியடி என பல குளறுபடிகளுடனும், நோய்த் தொற்று அபாயத்திலும் நடந்து முடிந்திருக்கிறது. தைத் திங்கள் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டில், பாலமேடு மகாலிங்கசுவாமி கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஏழு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் 704 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

150 பேருக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என அரசாணை பெயரளவில் மட்டுமே இருந்ததை கூடிய கூட்டம் உணர்த்தியது. வெளி மாவட்ட மக்கள், வெளி மாநில சுற்றுலா பயணிகள். வெளிநாட்டினர் எவரும் வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வாடிவாசல் முழுவதுமே மக்கள் கூட்டம் வெள்ளமாக காட்சி அளித்தது.

சுற்றிலும் மக்கள் குழுமி இருந்தது சமூக இடைவெளி கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு நிரம்பியிருந்தது. இது ஒரு புறமிருக்க ஜல்லிக்கட்டு போட்டியில், தான் வளர்த்த காளையை ஒரு மாடுபிடி வீரர் பிடித்து விட்டாரே என்று ஆவேசப்பட்டு வீரரை காளை உரிமையாளர் தாக்கிய சம்பவம் நடந்தது.

 இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போலீசார் பொதுமக்களை நோக்கி தங்கள் இலக்குகளை செலுத்தத் தொடங்கினர். தகராறை விலக்குகிறோம், கூட்டத்தை கலைக்கிறோம் என்ற பெயரில் போலீசார் தாக்கியதில் அப்பாவியான காளை உரிமையாளர் ஒருவரின் மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், காவல்துறையினர் என அடுத்தடுத்து களமாடி கொண்டிருக்க, அங்கு சர்வசாதாரணமாக அரங்கேறியது பல காட்சிகள். காளை உரிமையாளர்களே மாடுபிடி வீரர்களின் டீ-சர்ட் அணிந்து களத்தில் இறங்கிய விவகாரம் தெரிய வந்தது.

 வேறு சில பெயர்களில் டீ- சர்ட் அணிந்து மாடுபிடி வீரர்கள் உள்ளே புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு வீரர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இதனிடையே காளைகளை வாடிவாசலில் இருந்து அனுப்புவதிலும் தகராறு ஏற்பட்டது. அதில் உள்ளூரைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர்கள், வெளியூர் ஜல்லிக்கட்டு மாட்டுக்காரர்களை அடித்து மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. பெரிய தடிக் கம்பு ஒன்றை எடுத்து வாடி வாசலுக்கு பின்பு மாட்டடி அடித்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

இப்படி குழப்பங்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து கொண்டிருக்க, பரிசு அறிவிப்பதிலும் பெரும் குழப்பம் நிலவியது. சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், இல்லை, இல்லை... அது பிடிபடாத மாட்டுக்குத்தான் அந்த கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்தர் பல்டி அடித்தனர் நிகழ்ச்சி நிர்வாகிகள். ஆக, மொத்தத்தில் அடாவடி ஜல்லிக்கட்டு நடந்துள்ளது பாலமேட்டில். இத்தனைக்கும், உள்ளூர் அமைச்சர் மூர்த்தியின் பெயரை சொல்லி அடாவடியில் ஈடுபட்ட சிலர் தான் காரணம் என குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள். 

click me!