பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் கடந்த 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை முடிவடைந்தாலும், இம்மாதம் 31ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் சர்ச்சை வெடித்து வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பில் வெறும் இலவம்பஞ்சு கொட்டையையும், அவரைக் கொட்டையையும், வெண்டைக்காய் விதையையும் சேர்த்து மிளகு என்று பாக்கெட் செய்து கொடுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், சீரகம், மிளகு, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் கடந்த 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை முடிவடைந்தாலும், இம்மாதம் 31ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு இடங்களில் சர்ச்சை வெடித்து வருகிறது.
அரசு கொடுத்த பொருட்களில் அரிசி மற்றும் ரவைகளில் வண்டுகள் இருப்பதாவும், சில இடங்களில் பொருட்கள் தரமில்லாமல் வருவதாக தொடர் புகார்கள் வருகின்றன. முக்கியமாக வெல்லம் உருகி பேஸ்ட் மாதிரியாக ஆகி விடுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. திருவண்ணாமலையில் 2.5 டன் வெல்லத்தை பயன்படுத்த உகந்ததல்ல என ஆட்சியர் நிறுத்தி வைத்தார். அதேபோல், புளி பாக்கெட்டில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவமும் அதனைத் தொடர்ந்த வழக்கும் மரணமும் இன்னமும் சர்ச்சையாகவே உள்ளது.
பல்வேறு நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பை எடுத்து செல்ல பைகள் வழங்கப்படவில்லை. பொங்கல் தொகுப்புக்காக வட மாநிலங்களில் இருந்து தரமற்ற பொருட்களை வாங்கி விநியோகம் செய்வதாகவும், பாக்கெட்டுகளில் ஹிந்தி மற்றும் மற்ற மாநில மொழிகளில் அச்சிடப்பட்ட சர்ச்சையும் என்று பொங்கல் தொகுப்பு பிரச்சனைகளின் தொகுப்பாகவே உள்ளது. அதிக கமிஷன் கிடைப்பதால் வட மாநிலங்களில் இருந்து பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்கியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட 100 கிராம் மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையும், அவரைக் கொட்டையையும், வெண்டைக்காய் விதையையும் சேர்த்து மிளகு என்று பாக்கெட் செய்து கொடுத்துள்ளனராம். அதேமாதிரி மிளகாய்த்தூள், தனியாதூள் பாக்கெட்டுகளில் மரத்தூளை கலப்படம் செய்துள்ளனர். ”அரசு கொடுக்கும் பொருட்களை வாங்குபவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்களா? கொரோனா வந்து சாவதை போல, அரசின் இந்த பொங்கல் தொகுப்பை வாங்கி சமைத்தாலும் செத்துவிடுவோம்” என்று காட்டமாக கூறுகின்றனர் பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள்.
”இது குறித்து ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டால், அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளிக்கின்றனர். எதற்கும் உதவாத பொங்கல் பரிசு தொகுப்பு எங்களுக்கு எதற்கு வழங்குகிறீர்கள்” என்று பிரபல வார பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கொந்தளிக்கின்றனர் மக்கள். அந்த பத்திரிக்கையின் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தான் இப்போது காட்டூத்தீ போல பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.