தமிழக விடுதலை போராட்ட வீரர்களை அவமதிப்பதா..?? கண்கள் சிவந்து ரத்தம் கொதிக்கும் சசிகலா.

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2022, 1:27 PM IST
Highlights

இத்தருணத்தில் சுதந்திரம்  பெற காரணமாக இறந்தவர்களை மறந்துவிடாமல் அவர்களுக்கு மதிப்பளித்து, அதேபோன்று நம் வருங்கால சந்ததியினரும் நாட்டின் விடுதலைக்காக போராடிய நமது தலைவர்களைப் பற்றி அறிந்து கொள்கின்ற வகையிலும் செயல்பட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. 

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி கலந்துகொள்ள அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்திருப்பது  மன வேதனை அளிக்கிறது என  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார். நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும், எந்த ஒன்றையும் ஆராய்ந்து தெரிந்து அறிந்துகொண்டு செயல்படும்போது ஆட்சியாளர்களுக்கும் அது நன்மை அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.

மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி தேதி குடியரசு தின விழாவை கொண்டாடி வருகிறது. அதில் ஒவ்வொரு மாநிலத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் சுதந்திர போராட்டத்திற்கு தியாகம் செய்த தியாகிகளின் திருவுருவச் சிலைகள், புகைப்படங்கள் வாகனங்களில் அணிவகுப்பு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் அலங்கார ஊர்திக்காக 36 மாநிலங்கள் மாடல்களை அனுப்பியிருந்தன. அதில் வெறும் 12 மாநிலங்களில் மாதிரிகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சுதந்திரப் போராட்ட தியாகிகள் விஉசிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியாரின் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இந்திய அளவில் மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் இவர்களை யார் என்றே தெரியாது என்றும் அந்தக் குழுவில் இடம் பெற்ற அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் சுபாஷ் சந்திர போஸ் அலங்கார ஊர்தி, கேரள மாநிலத்தின் ஸ்ரீ நாராயணகுருவின் அலங்கார ஊர்திகளும் புறக்கணிக்க ப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தென் மாநிலங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பலரும் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடியரசு தின அணிவகுப்பில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி கலந்துகொள்ள அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் நம் தமிழகத்தின் சார்பாக இடம்பெறக்கூடிய தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள் அனுமதி மறுத்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசாக விளங்கக்கூடிய நம் இந்திய தாய்த் திருநாட்டில் நாம் அனைவரும் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க நம் தமிழகத்தை சேர்ந்த வ.உ சிதம்பரனார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் நிறைவை போற்றும் விதமாக மத்திய அரசு " 75 ஆசாதி கா அம்ரிட் மஹோத்சவ் "   என்ற பெயரில் கொண்டாடி வரும் வேளையில், மாநிலங்களும் சுதந்திரமடைந்த பவள விழாவை கொண்டாடும் வகையில் நம் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக அவர்கள் உருவங்கள் அடங்கிய ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற எண்ணுவதை மத்திய அரசு அதிகாரிகள் கனிவுடன் பரிசீலித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அனுமதி அளிக்க மறுப்பது மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும் நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன. 

இத்தருணத்தில் சுதந்திரம்  பெற காரணமாக இறந்தவர்களை மறந்துவிடாமல் அவர்களுக்கு மதிப்பளித்து, அதேபோன்று நம் வருங்கால சந்ததியினரும் நாட்டின் விடுதலைக்காக போராடிய நமது தலைவர்களைப் பற்றி அறிந்து கொள்கின்ற வகையிலும் செயல்பட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இவற்றையெல்லாம் அரசு அதிகாரிகள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும் எந்த ஒரு செயலும் அரசு அதிகாரிகள் நன்றாக ஆராய்ந்து தெரிந்து கொண்டு செயல்படும் போதுதான் ஆட்சியாளர்களுக்கும் அது நன்மை அளிக்கக் கூடியதாக அமையும், எனவே தமிழ் மண்ணின் வரலாற்றையும் அதன் பெருமைகளையும் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும் கருத்தில் கொண்டு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தியை தமிழகத்தின் சார்பாக கலந்து கொள்கிற வகையில் மத்திய அரசு தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்து உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!