2013 ஏப்ரல் 30-ல் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கொடுமை... திடீரென நினைவலைகளை தட்டிவிட்ட டாக்டர் ராமதாஸ்.!

By Asianet TamilFirst Published Apr 30, 2021, 10:02 PM IST
Highlights

2013-ஆம் ஆண்டு மே 1-ஆம் நாள் அதிகாலை 5 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் வெளிச்சம் கூட இல்லாத கொதிக்கும் இருட்டறையில் அடைக்கப்பட்டேன் என்று 8 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சம்பவங்கள் பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  நினைவுப்படுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரக்காணம் கலவரத்தில் அப்பாவி வன்னிய இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு,  8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், அதாவது 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் நாள் விழுப்புரத்தில் அறவழிப் போராட்டம் நடத்துவதற்காக சென்ற நான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டேன். தொடர்ந்து காற்றோட்டம் இல்லாத திருமண அரங்கத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக அடைத்து வைத்திருந்த காவல்துறையினர், அதிகாலை 2 மணிக்கு மேல் என்னை அழைத்துச் சென்று  16 மணி நேர அலைக் கழிப்புக்குப் பிறகு  மே 1-ஆம் நாள் அதிகாலை 5 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் வெளிச்சம் கூட இல்லாத கொதிக்கும் இருட்டறையில் அடைக்கப்பட்டேன். அப்போது கடுமையான முதுகுவலியால்  அவதிப்பட்டு வந்த நான், வலி தாங்க முடியாமல் எனக்கு வழங்கப்பட்ட அழுக்குப் போர்வையை விரித்து படுத்துக் கொண்டேன். 
அதன்பின் என் மீதான பழைய வழக்குகள் அனைத்தும் தூசி தட்டப்பட்டு, அவை அனைத்திலும் கைது செய்யப்பட்டேன். 12 நாட்கள் சிறைக்கொடுமைக்குப் பிறகு  மே 11-ஆம் தேதி பிணையில் விடுதலை செய்யப்பட்டேன். அப்போது செய்தியாளர்களிடம்  பேசிய நான், இன்னும் இரு நாட்கள் நான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் நான் உங்களுக்கு பேட்டி கொடுத்திருக்க மாட்டேன்; சிறையிலேயே உயிரிழந்து இருப்பேன் என்று கூறினேன். விடுதலை ஆன அன்று இரவிலேயே எனக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் எனது உடல் நலன் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் எனக்கு  பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்தனர். அதன்மூலம் நான் உயிர் பிழைத்தேன்.” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறையில் அவர் அனுபவித்தக் கொடுமைகள் குறித்து, “பாழடைந்த கட்டிடம், புழுங்கும் இருட்டறை,  சிறையில் டாக்டர் அய்யாவுக்கு கொடுமை” என்ற தலைப்பில் 03.05.2013 அன்று பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையையும் இந்த அறிக்கையில் அப்படியே விவரித்துள்ளார் டாக்டர் ராமதாஸ். அதிமுக ஆட்சியில் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது இந்த கைது நடவடிக்கை நடந்தது. விழுப்புரத்தில் தடையை மீறி நடந்த ஆர்ப்பட்டாத்துக்கு சென்ற டாக்டர் ராமதாஸை போலீஸார் கைது செய்தனர். வழக்கமாக ஆர்ப்பாட்டத்துக்கு செல்வோரை கைது செய்து மாலையில் விடுவிப்பதைப்போல விடுவிப்பார்கள் என்று டாக்டர் ராமதாஸும் பாமகவினரும் எதிர்பார்த்தனர். ஆனால், டாக்டர் ராமதாஸை காக்க வைத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தொடர்ச்சியாக 6 வழக்குகள் அவர் மீது பாய்ந்தது.

click me!