
இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது அலை வேகமாக பாதிப்புகளை ஏற்படுத்துகிற நிலையிலும் ஏப்ரல் 7 அன்று பிரதமர் மோடி பேசும்போது, 'கடந்த ஆண்டில் கொரோனாவை ஒழிப்பதில் எப்படி வெற்றி கண்டோமோ, அதேபோல, இந்த ஆண்டிலும் வெற்றி காண்போம்' என்று நம்பிக்கையோடு கூறியது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. நாடு இன்று அல்லல்பட்டுக் கொண்டிருக்கிற நிலையைப் பார்க்கும்போது, அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்கக்கூடும் என்று அனுமானிக்கிற குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாமல் பிரதமர் மோடி இருந்திருக்கிறாரே என்பதை, மிகுந்த வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
எனவே, கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் சிக்கிக் கொண்டிருக்கிற நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கு பிரதமர் மோடி முற்றிலும் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டைக் கூறுவதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. மத்திய அரசின் தவறான அணுகுமுறைகளின் காரணமாகவே இந்திய மக்கள் இன்றைக்கு மரண ஓலங்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று கூறுகிற அளவிற்கு நாட்டின் நிலைமையை அறியாதவர்கள் அல்ல. ஆனால், நாடு கொரோனா பாதிப்பினால் எதிர்கொண்டிருக்கிற அனைத்து அவலங்களுக்கும் பொறுப்பேற்று, குறைந்தபட்சம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்த்துவதற்காக மத்திய அரசின் அணுகுமுறையில் உள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்ட கீழ்க்கண்ட காரணங்களைப் பட்டியலிட விரும்புகிறேன் :
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ளவர்களுக்குத் தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு போடுமா? மாநில அரசு போடுமா? 45 வயதிற்கு மேற்பட்டோருக்குத்தான் மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசி போடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு ஏன் முன்பதிவு செய்கிறது? முன்பதிவை மத்திய அரசு செய்தால் மாநில அரசு எந்த வகையில் தடுப்பூசி போட முடியும்? கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய அரசு குழப்பத்திற்கு மேல் குழப்பம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு எப்போது விடிவு ஏற்படப் போகிறது?
மக்கள் உயிருக்காகப் போராடுகிற நேரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தடுப்பூசி தயாரிக்கிற ஏகபோக உரிமையை அனுமதித்தது ஏன்? இந்திய மக்களின் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இருந்தால், 1960களில் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தடுப்பூசி உற்பத்தி செய்கிற உரிமையை வழங்கி அம்மை, போலியோ, காலரா போன்ற கொள்ளை நோய்களைக் கடந்த கால அரசுகள் ஒழித்தது போன்ற அணுகுமுறையை மோடி அரசு கையாண்டிருக்க வேண்டும்.
இந்திய மக்கள் அனைத்து சுகங்களையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலத்தைப் பற்றி கற்பனை கூடச் செய்ய முடியாமல், என்றைக்கு நமக்கு கொரோனா தொற்று வருமோ, எப்போது நமது உயிர் பறிக்கப்படுமோ? என்ற அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வருகின்றனர். 136 கோடி மக்களையும் ஒருசேர மரண பயத்தில் ஆழ்த்தியதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டு குறைந்தபட்சம் மத்திய பாஜக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும் ?” என்று அறிக்கையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.