
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்ப்பு எட்டப்படும் என எதிர்பார்த்தோம், ஆனால், தற்போது அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், இது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்றும் எம்.எல்.ஏ. கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவை செயலாளர் க. பூபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநரிடம், முதலமைச்சர் எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மனு அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளனர்.
இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி காலி என அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ. கனகராஜ், டி.டி.வி. தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.