பிடிஆர்-ஐ பாராட்டிய முதலமைச்சர், தற்போது இலாகா மாற்றியதை ஏற்க முடியாது. பிடிஆர் ஆடியோ உண்மைதான், என்மீது மீண்டும் ஒரு அவதூறு வழக்கு போடுங்கள். என்மீது வழக்கு தொடர்ந்தால் முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
ஜூலை முதல் வாரத்தில் 21 பேர் அடங்கிய திமுகவின் 2வது சொத்து பட்டியல் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திமுக நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியில் எனக்கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட்டார். அதில், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், டிஆர் பாலு உட்பட 17 பேரின் சொத்து மதிப்பு 1லட்சத்து 50 ஆயிரம் கோடி என தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, உதயநிதி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அண்ணமாலைக்கு தனித்தனியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்த நோட்டீஸ்க்கு பதில் அளித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க தயார் என கூறியிருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது முன்னாள் மத்திய அமைச்சரும். திமுக பொருளாளருமான டிஆர் பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை;- என் மீது அவதூறு வழக்கு நகைப்புக்குரியது. நீதிமன்றத்தில் நிற்காது. அரசு வழக்கறிஞர் மூலமும் என் மீது வழக்கு போடுங்கள். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். 3 முறை பால் விலையை உயர்த்தியவரும், தொண்டர் மீது கல் எறிந்த நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதை பாஜக வரவேற்கிறது. பால் விலையை புதிய அமைச்சர் குறைக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை முதல் வாரத்தில் 21 பேர் அடங்கிய திமுகவின் 2வது சொத்து பட்டியல் வெளியிடப்படும். 2வது பட்டியலில் புதிய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியாகும். டி.ஆர்.பாலு மீது வைக்கும் குற்றச்சாட்டு அதிகரிக்குமே தவிர ஒரு சதவிகிதம் கூட குறையாது. வழக்கிற்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த மாட்டேன். ONGC நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலைக்கு எரிவாயு கேட்டது குறித்து டி.ஆர்.பாலு விளக்கம் அளிக்கவேண்டும். 2 மாதத்திற்கு முன்புவரை பிடிஆர்-ஐ பாராட்டிய முதலமைச்சர், தற்போது இலாகா மாற்றியதை ஏற்க முடியாது. பிடிஆர் ஆடியோ உண்மைதான், என்மீது மீண்டும் ஒரு அவதூறு வழக்கு போடுங்கள். என்மீது வழக்கு தொடர்ந்தால் முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதிக்கு 3வது முறையாக சவால் விடுக்கிறேன். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். ஆருத்ராவிலிருந்து எந்த அமைச்சருக்கு பணம் சென்றிருக்கிறது என்பதை ஜூலை முதல் வாரத்தில் சொல்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.