அதுவே உருட்டுதான்... அதை எப்படி வேண்டுமானாலும் உருட்டலாம்.. இது காயத்ரி ரகுராமின் உருட்டு!

By Asianet TamilFirst Published Jan 10, 2022, 10:54 PM IST
Highlights

 கோயில்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்துக்களின் பண்டிகை வரும்போது மட்டும் ஏன் இப்படிச் செய்கிறார்கள். திமுக ஆட்சி இந்துக்களைத்தான் டார்கெட் செய்கிறது. 

மருத்துவக் கல்லூரி திறந்து வைக்க வரும் பிரதமரை வரவேற்பதாக சொல்லும் முதல்வர் ஸ்டாலின், ஏன் பஞ்சாப் பிரச்சினை குறித்து மவுனம் காக்கிறார் என்று பாஜக கலை கலாசார பிரிவு மாநில தலைவரும் நடிகையுமான காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது அவர் கூறுகையில், “பொங்கல் விழா நடக்குமா அல்லது ஊரடங்கைப் போட்டு விடுவார்களா என்ற கேள்வி எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது. கோயில்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்துக்களின் பண்டிகை வரும்போது மட்டும் ஏன் இப்படிச் செய்கிறார்கள். திமுக ஆட்சி இந்துக்களைத்தான் டார்கெட் செய்கிறது. காங்கிரஸ் கட்சி காலங்காலமாக ரீல் விடுகிறது. பஞ்சாபில் என்ன நடந்தது என்று எல்லாருக்குமே தெரியும் . பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாயே திறக்கவில்லை. பஞ்சாப் அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கவில்லை. மருத்துவக் கல்லூரி திறந்து வைக்க வரும் பிரதமரை வரவேற்பதாக சொல்லும் முதல்வர் ஸ்டாலின், ஏன் பஞ்சாப் பிரச்சினை குறித்து மவுனம் காக்கிறார் என்று தெரியவில்லை.

தமிழக அரசு சொந்தமாக எந்தத் திட்டங்களையும் கொண்டு வருவதில்லை. எல்லா திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள்கள். தமிழக அரசுக்கு மத்திய அரசின் தயவு தேவை. நீட் உள்பட எந்த விவகாரமாக இருந்தாலும், திமுக ஆட்சியாளர்களுக்கு இரட்டை நிலைப்பாடுதான். நீட் தேர்வை பாஜக மட்டும் வரவேற்கவில்லை. இங்கிருக்கும் மாணவர்கள் வரவேற்கிறார்கள். ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வால் நிறைய நல்ல விஷயங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான் பாஜக எப்பவுமே மக்களின் குரலாக உள்ளது. மாணவர்களுக்கு எது தேவையோ அதைத்தான் பாஜக நிறைவேற்றுகிறது.

அமித் ஷா நேரம் கிடைக்கும் போதுதான் தமிழக எம்.பி.க்களைச் சந்திக்க அனுமதி கொடுப்பார். அவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் உள்துறை அமைச்சர் அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கும் உள்துறை அமைச்சர். அதனால் அவருக்கு தெரியும். எம்.பிக்களை அழைத்து பேசும் போது அவருக்கு சப்ஜெக்ட் என்னவென்று தெரிய வேண்டும். இவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்று தெரிய வேண்டும். அதனால், அதை தெரிந்துகொள்ள அவருக்கும் நேரம் கொடுக்க வேண்டும். பொங்கலுக்கு ரூ.5000 கொடுக்கவில்லை. இது மிகப்பெரிய வருத்தம். கொரோனா விஷயத்தில் நிறைய தவறு நடந்திருக்கிறது. மழை விவகாரத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு மழை பெய்ய போகுது என்று ஒரு அறிவிப்பு கூட கொடுக்கவில்லை” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்தார். மழை அறிவிப்பு கொடுக்கவில்லையா என்று செய்தியாளர்கள் எதிர்க்கேள்வி கேட்க, “உருட்டு எப்படி வேண்டுமானாலும் உருட்டலாம்” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

click me!