நன்றி மறவாத அமெரிக்கா.. இந்தியாவுக்கு உதவ முன்வந்தது.. மோடியுடன் அதிபர் பைடன் தொலைபேசியில் உரையாடல்.

By Ezhilarasan BabuFirst Published Apr 27, 2021, 9:51 AM IST
Highlights

கொரோனா முதல் அலையின்போது நெருக்கடியில் இருந்த அமெரிக்காவுக்கு இந்தியா தன்நலம் பாராமல் ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளை டன் கணக்கில் வழங்கி தனது கொடை உள்ளத்தை காட்டியது. இந்நிலையில் அதை உணர்ந்து கொண்ட அமெரிக்கா இந்தியாவுக்கு கைமாறு செய்ய முன் வந்துள்ளதாகவே இது பார்க்கப்படுகிறது.  

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். அப்போது ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் தடுப்பூசி தயாரிப்பதற்கான  மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டை கலைய இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது என ஜோ பைடன் பிரதமர் மோடியிடம்  உறுதியளித்துள்ளார். இது மிக சரியான நேரந்தில் நடந்த, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலாக கருதப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அன்றாடம் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். சர்வதேச நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளதால் குறிப்பாக வடமாநிலங்களில் போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தாலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும் போதிய படுக்கை வசதியின்றி நோயாளிகள் மருத்துவமனை வாசல்களிலேயே உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் பார்வையில் பரிதாபத்திற்குரிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஆக்சிஜன் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். அப்போது இந்தியாவில் நிலவும் கொரோனா சூழ்நிலை, தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பேசியது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உரையாடினேன். அது பலனளிக்கும் வகையில் அமைந்தது. இரு நாட்டிலும் உள்ள கொரோனா குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உதவ முன்வந்துள்ள அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தேன் எனக் கூறியுள்ளார்.

அதாவது, இந்தியாவில் ஆக்சிஜன் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அதேபோல் பல்வேறு மருத்துவ சாதனங்களையும் அனுப்பி வைக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அவசர தேவை அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளை ஏற்பாடு செய்யவும், அதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. எனவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து பெருமளவிலான மூலப்பொருட்கள் அமெரிக்காவிலிருந்தே கிடைக்கிறது, எனவே அதை உள்நாட்டு தேவை கருதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை செய்திருந்த நிலையில், இந்தியா நெருக்கடிக்கு ஆளானது. இந்நிலையில், இந்தியாவில் அவசர நிலை கருதி அதை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இது குறித்து ஜோ பைடன் இந்திய பிரதமரிடம்  விரிவாக எடுத்துரைத்ததாக  கூறப்படுகிறது. இந்த நெருக்கடி நேரத்தில் இரு நாட்டி தலைவர்களுடனான பேச்சு வார்த்தை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கொரோனா முதல் அலையின்போது நெருக்கடியில் இருந்த அமெரிக்காவுக்கு இந்தியா தன்நலம்பாராமல் ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளை டன் கணக்கில் வழங்கி தனது கொடை உள்ளத்தை காட்டியது. இந்நிலையில் அதை உணர்ந்து கொண்ட அமெரிக்கா இந்தியாவுக்கு கைமாறு செய்ய முன் வந்துள்ளதாகவே இது பார்க்கப்படுகிறது. 
 

click me!