தேனியை மட்டுமல்ல ஒட்டுமொத்த 18 தொகுதிகளையும் அடிச்சித் தூக்குமாம் டி.டி.வி.கட்சி...

By Muthurama LingamFirst Published Mar 23, 2019, 3:22 PM IST
Highlights

துணை முதல்வர் ஓ.பி.எஸ்சின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதி அந்தஸ்து பெற்றிருந்த தேனி தொகுதி, அந்த தொகுதியில் போட்டியிடும் அ.ம.ம.க கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பால் இன்னும் பரபரப்புக்கு ஆளாகியுள்ளது.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்சின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதி அந்தஸ்து பெற்றிருந்த தேனி தொகுதி, அந்த தொகுதியில் போட்டியிடும் அ.ம.ம.க கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பால் இன்னும் பரபரப்புக்கு ஆளாகியுள்ளது.

ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக  வேட்பாளராக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் களமிறக்கப்படுவார் என பேசிக் கொண்டிருக்க அவரை தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்து ஆளும் அதிமுகவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் டிடிவி தினகரன்.  அடுத்த அதிர்ச்சியாக  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படி  தேனி தொகுதி விஐபி தொகுதியாக உருவாகி ஒட்டுமொத்த ஊடக கவனத்தையும் பெற்றிருக்கும் நிலையில் தேனி வெற்றி வாய்ப்பு குறித்துப் பேசிய  தங்க தமிழ்ச் செல்வன், தேனியை மட்டுமல்ல இடைத்தேர்தல் நடக்கும் அத்தனை தொகுதிகளையும் நாங்களே கைப்பற்றுவோம்’ என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர்,’’ ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லை. மக்களை இதற்கு முன் அவர் சந்தித்ததும் இல்லை. தேர்தல் வந்ததும் திடீரென்று வேட்பாளராகி பிரச்சாரத்துக்கு வருகிறார். அவரை தொகுதி மக்களுக்கு நேரடியாகத் தெரியவே தெரியாது. அப்பாவுடன் அவ்வப்போது அரசியல் மேடைகளில் அமர்ந்து கைகாட்டிச் செல்வார். அவர் எப்படி விஐபி ஆக முடியும்.பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் ரவீந்திரநாத்தை அடையாளப்படுத்தினாலும்கூட தேனி மக்கள் அவரை நம்ப மாட்டார்கள்.

அடுத்த போட்டியாளரான  ஈவிகேஎஸ்.க்கு தேனியா சொந்த ஊர்? சென்னையில் அமர்ந்துகொண்டு தொகுதியில் களப்பணி என்ன செய்ய முடியும்? இல்லை, எங்கள் தொகுதியைப் பற்றிதான் அவருக்கு என்ன தெரியும். அவர் மீது மக்களுக்கு எப்படி பற்று ஏற்படும்.

ஆனால் நான் அப்படி அல்ல. இந்த ஊர்க்காரன். இந்த ஊர் மக்களுக்கும் எனக்கும் அப்படி ஒரு நெருக்கம் இருக்கிறது. இங்கே நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் நானும் மக்களோடு மக்களாகப் பங்கேற்பேன். தொகுதி மக்களுக்காக சேவை செய்திருக்கிறேன். எங்கள் துணை பொதுச் செயலாளருக்கு இந்த ஊரில் செல்வாக்கு இருக்கிறது. அவரது அரசியல் பயணம் தொடங்கியதே இந்தத் தொகுதியில் இருந்துதான். அந்தச் செல்வாக்கு எங்களுக்கு வாக்குகளாக மாறும்.

நாங்கள் ஓட்டைப் பிரிக்கும் சக்தி என்றுதான் எல்லோரும் எழுதுவார்கள், பேசுவார்கள். உண்மையில் நாங்கள் தேர்தல் அரசியலில் எப்படிப்பட்ட சக்தி என்பதை ஆர்.கே.நகரிலேயே நிரூபித்துவிட்டோம். அதனால், 18 சட்டப்பேரவை தொகுதியிலும் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் டிடிவி தினகரனுக்கே வெற்றி.

அதிமுகவில் துரோகிகள்தான் இருக்கிறார்கள். அது மக்களுக்குத் தெரியும். திமுகவில் கலைஞர் இடத்துக்கு ஸ்டாலினால் வர முடியுமா என்று தெரியவில்லை. ஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழந்ததே. அதுவே நடந்திருக்கக்கூடாது. அப்படிப்பட்ட வலுவில்லாத தலைமையுடன் திமுக இருப்பதால் எங்களுக்கே வெற்றி கிட்டும்.

மக்கள் புதிய தலைமையை விரும்புகின்றனர். மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தான் எங்கள் தேர்தல் வாக்குறுதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தும். அதுவும் தேனியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்’ என்கிறார் தங்கத் தமிழ்ச்செல்வன்.

click me!