மீண்டும் உடைகிறது தே.மு.தி.க?!: முடியாத விஜயகாந்த்! முரண்டுபிடிக்கும் பிரேமலதா! இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க!

By Vishnu PriyaFirst Published Mar 23, 2019, 1:40 PM IST
Highlights

தேர்தல் பிரசார மேடைகளில் பேசமாட்டார் விஜயகாந்த்! அவருக்கு ஓய்வு தேவை!: கூட்டணி எல்லாம் முடிந்து, பட்டியல் வெளியான பின் உண்மையை தெனாவெட்டாக உடைத்திருக்கிறது தே.மு.தி.க. இதில் ஆளுங்கட்சிக்கு ஏக அதிர்ச்சி. இந்நிலையில் அடுத்தடுத்து கேப்டன் கட்சியில் நடக்கும் சம்பவங்கள், உடைப்பை நோக்கித் தள்ளிக்கொண்டு போகின்றன அக்கட்சியை! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

மீண்டும் உடைகிறது தே.மு.தி.க?!: முடியாத விஜயகாந்த்! முரண்டுபிடிக்கும் பிரேமலதா!  இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க!
தேர்தல் பிரசார மேடைகளில் பேசமாட்டார் விஜயகாந்த்! அவருக்கு ஓய்வு தேவை!: கூட்டணி எல்லாம் முடிந்து, பட்டியல் வெளியான பின் உண்மையை தெனாவெட்டாக உடைத்திருக்கிறது தே.மு.தி.க. இதில் ஆளுங்கட்சிக்கு ஏக அதிர்ச்சி. இந்நிலையில் அடுத்தடுத்து கேப்டன் கட்சியில் நடக்கும் சம்பவங்கள், உடைப்பை நோக்கித் தள்ளிக்கொண்டு போகின்றன அக்கட்சியை! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

அவர்கள் விளக்கும் விவகாரம் இதுதான்...

”சிகிச்சைக்காக அமெரிக்காவில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா இருந்தபோதே கூட்டணி குறித்து அ.தி.மு.க.வுடன் பேச ஆரம்பித்துவிட்டார் சுதீஷ். ஆனால் ‘உங்க கட்சியோட பலமே விஜயகாந்த் தான்.  அவருக்காக மட்டும்தான் ஓட்டு விழுது. அதனால முதல்ல அவர் வரட்டும், மக்கள் முன்னடி அவரை காண்பிங்க. அப்புறம் பேசலாம்.’ என்று நெத்தியடியாய் தங்கள் கட்சியின் பதிலைச் சொன்னார் அமைச்சர் ஜெயக்குமார். 

இதன் பிறகு சிகிச்சை முழுமையடையா நிலையில், மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடி விஜயகாந்தை அள்ளிக் கொண்டு வந்து சென்னை விமான நிலையத்தில் செம்ம சீன் போட்டனர் அக்கட்சியினர். லோக்கலில் வீடு இருந்தும், அங்கே அலுங்காமல் பயணிக்க சொகுசு கார்கள் இருந்தும் கூட விமான நிலையத்தில், சுங்கத்துறை அலுவலகத்தில் மணிக்கணக்காக தூங்கி, தனது ’இயலா நிலையை’ வந்த நாளிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டினார் விஜயகாந்த். ஆனாலும் பிரேமலதா வெளியே வந்து ‘கேப்டன் தூங்கிட்டார், அதான் அவரை டிஸ்டர்ப் பண்ணல. இது எல்லா மனுஷங்களுக்குமான இயல்பு. டிஃபன் சாப்பிட்டுட்டு இதோ கிளம்புறோம்.’ என்று கிச்சன் டைப் பாலிடிக்ஸ் பண்ணிப் பார்த்தார் ஆனால் பெரிதாய் பப்பு வேகலை.

 

விஜயகாந்தை என்னதான் அழைத்துவந்துவிட்டாலும் கூட, அவருடைய உடல் நிலையை பார்த்து ஷாக் ஆகிவிட்டது அ.தி.மு.க. அதனால்தான் பி.ஜே.பி.யை அவரது வீட்டுக்கு அனுப்பி பல்ஸ் பார்த்தது. விஜயகாந்தால் இயல்பாக பேச கூட முடியவில்லை என்று தெரிந்ததும் கூட்டணி வைப்பதில் ஆளுங்கட்சி பேக் அடித்தது. ’இவர் வந்தும் ஒரு நன்மையும் நமக்கு நடக்கப்போவதில்லை.’ என்பதே அதன் உள் எண்ணம். இதைப் புரிந்து கொண்ட தே.மு.தி.க.வோ தி.மு.க. தரப்பில் சைடு கேப்பில் பேச்சை துவக்கியது. இதை கவனித்துவிட்ட பி.ஜே.பி., ‘விஜயகாந்த் நம்ம கூட்டணியில் இருந்தேயாகணும்.’ என்று  ஒரே முடிவாய் அடிக்க, வேறு வழியில்லாமல் பெரும் பேரங்கள், பஞ்சாயத்துகள், சமாதான படலத்துக்குப் பின் நாலு சீட்டை கொடுத்து நாலு பேரில் ஒருவராய் உள்ளே தூக்கிப் போட்டுள்ளது அக்கட்சியை ஆளுங்கட்சி. 

ஆனால் கூட்டணி குறித்து ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ‘விஜயகாந்த் பிரசாரத்துக்கு வரவேண்டும். அவரால் மட்டுமே உங்களுக்கு ஓட்டு கிடைக்கும். அதனால் மட்டுமே நம் கூட்டணிக்கு பலன்.’ என்று தே.மு.தி.க.விடம் சொல்லிக் கொண்டே இருந்தனர் அ.தி.மு.க. தலைகள். அப்போதெல்லாம் தலையாட்டிவிட்டு, கூட்டணி ஒதுக்கீடு மற்றும் தொகுதிகளும் அறிவித்து எல்லாம் ஓ.கே. ஆன பின், ‘கேப்டன் பிரசார மேடைகளில் பேச மாட்டார். அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.’ என்று சிம்பிளாக அறிவித்துவிட்டு நகர்ந்துவிட்டது தே.மு.தி.க. இதில் ஆளுங்கட்சிக்கு ஏக ஷாக், கடுப்பு. ஆனால் பிரேமலதாவுக்கோ, ட்ரீட்மெண்டில் இருக்கும் மனுஷனை பிரஷர் கொடுத்து வரவெச்சுட்டு, வந்த பிறகு டீல்ல விட்ட அ.தி.மு.க.வுக்கு நாம கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட் இது! என்று தலைமை நிர்வாகிகளிடம் கெத்தாக பேசியிருக்கிறார். 

‘விஜயகாந்த வராவிட்டால் உங்கள் தொண்டர் கூட ஓட்டு போடமாட்டார்கள். அவரை கண்டிப்பாக முக்கிய மேடைகளில் ஏற்றுங்கள்.’ என்று தொடர்ந்து ஆளுங்கட்சி சொல்லியும், பிடிவாதமாக மறுக்கும் பிரேமலதா ‘அவருக்கும் சேர்த்து நான் பேசிக் கொள்கிறேன். கேப்டன் வேறு, நான் வேறு இல்லை. என் பேச்சைக் கேட்டு கேப்டனே மிரண்டிருக்கிறார்!’ என்று தொடர்ந்து முரண்டு பிடிக்கிறார். 

எதிர்காலத்தில் விஜயகாந்த் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு சூழல்கள் உருவானால், கட்சியை வழிநடத்துமளவுக்கு ஒரு ஆளுமையாக தான் வளரவேண்டும், அதற்கு இது போன்ற தேர்தல்களை விட்டால் வேறு வழியில்லை, தன் தலைமையில் கட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றால், தொண்டர்கள் தானாகவே வந்து தன்னை ‘லேடி கேப்டன்’ என்று புகழ்வார்கள், ஆக இந்த வாய்ப்பை மிஸ் பண்ணவே கூடாது! என்று முரண்டில் இருக்கிறார் பிரேமலதா.

ஆனால் இதை சுத்தமாக விரும்பாத அ.தி.மு.க.வோ, தே.மு.தி.க.வை கண்டுகொள்ளாத செயலை இப்போதே துவக்கிவிட்டதாம். அந்தந்த மாவட்டங்களில் ‘பிரசார செலவு’ எனும் பெயரில் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க வேண்டிய காசில் ஓவராக கைவைக்கப்படுகிறதாம், சில மாவட்டங்களில் டீ செலவுக்கு கூட இன்னும் காசே தறவில்லையாம். பெரும் அரசியல் சரிவில் கட்சி கிடப்பதால் கையில் காசு புழங்காமல் கிடந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் இந்த அதிர்ச்சியால் சுருண்டுவிட்டனர். ‘நாற்பது தொகுதியில வெறும் 4 இடத்துலதான் நம்ம கட்சி நிற்குது. அங்கே நாம கைகாசை போட்டாலும் கூட பரவாயில்ல. ஆனால் மீது 36 தொகுதியில் அ.தி.மு.க., பா.ம.க., மற்றும் பி.ஜே.பி. வெற்றிக்கு நாம ஏன் சொந்த காசை செலவு பண்ணணும்?’ என்று வெறுத்து ஒதுங்குகிறார்களாம்.

 தே.மு.தி.க. கூடாரத்தினுள் ஏற்பட்டிருக்கும் இந்த சலசலப்பை கவனித்துவிட்ட தி.மு.க., ‘அப்படியே உங்க மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களை கூட்டிட்டு இந்தப்பக்கம் வந்துடுங்க. சிறப்பா கவனிக்குறோம். அதிகாரத்துக்கு வந்ததும் பதவி, கூடுதல் கவனிப்புன்னு உங்களை வேற லெவலுக்கு கொண்டு போயிடுறோம்.’ என்று தொடர்ந்து தூண்டில் போட்டு இழுக்கிறார்களாம். 

இதனால் கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது உடைந்தது போல் இந்த முறையும் தே.மு.தி.க. உடையும் நிலை உருவாகியுள்ளது. இதை ஸ்மெல் செய்துவிட்டு, வருத்தத்தில் இருக்கும் தங்கள் நிர்வாகிகளிடம் பேசி சமாதானாம் செய்ய முயன்று தோற்றிருக்கிறது பிரேமலதா டீம். விளைவு ‘இப்படி நம்மை  தெருவுல கொண்டாந்து நிறுத்திட்டாங்களே?’ என்று ஆளுங்கட்சி மீது செம்ம கடுப்பில் இருக்கிறார்கள். 
அதீத கெத்து ஆபத்தில்தானே முடியும்?!” என்கிறார்கள். 
ஆஹாங்!

click me!