வன்னியர்கள் முன்னேறியது யாரால்..? நன்றி உணர்ச்சி இல்லையா..? கொந்தளிக்கும் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2019, 12:57 PM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதி செய்த நன்றிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் மறந்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

திமுக தலைவர் கருணாநிதி செய்த நன்றிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் மறந்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

அரூர் பகுதியில் மு.க.ஸ்டாலின் தருமபுரி மக்களவை தொகுதி, திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து, ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ‘’எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை கொண்டு போய் அமித்ஷாவிடம் அடகு வைத்துள்ளார். மார்வாடி கடையில் கொண்டு சென்று அடகு வைத்தால் கூட மீட்டுவிடலாம். அமித்ஷாவிடம் அடகு, வைத்துள்ளீர்களே, அதை மீட்கவே முடியாது.

சேலம்-சென்னை நெடுஞ்சாசலை இந்தியாவே திரும்பி பார்க்கக்கூடிய அளவிற்கு மெகா கூட்டணி வைத்துள்ளோம் என எடப்பாடி கூறுகிறார். சாக்கடையில் நாற்றம் வந்தால் கூடத்தான் திரும்பி பார்ப்பார்கள். அந்த அர்த்தத்தில் அவர் பேசியிருக்கிறார். சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழி சாலை போடக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி, போராட்டம் நடத்தியது. அதிமுகவுடன் கூட்டணி சேரும் போது பாமக 10 அம்ச கோரிக்கை வைத்தது. அதில் சேலம்-சென்னை நெடுஞ்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. 

பாமகவால், மக்கள் நலன் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. தனி ஒருவர் கடவுள் என்று சொல்வதுதான் திமிரான செயல். அதைப் பற்றி கேள்வி கேட்ட எனக்கு திமிர் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுன்சிலராக கூட தகுதி கிடையாது. இவரெல்லாம் முதல்வரா என்று கேட்டவர் அன்புமணி ராமதாஸ். நன்றியுணர்ச்சி இல்லாதவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்கள். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக கேட்டுப் போராடியது. அப்போது வன்னியர்கள் பலரை சுட்டு கொன்றது அதிமுக அரசு.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கருணாநிதி முதல்வராக இருந்தபோது வன்னியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட பல ஜாதிகளை இணைத்து, மேலும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனி இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார். கல்வி, வேலைகள் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு காரணமாக தான் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னிய இன மக்கள் முன்னேறி உள்ளனர். வன்னிய இன மக்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கருணாநிதி வழங்கியது ராமதாசுக்கு பிடிக்கவில்லை. 

ஏனெனில் இதைச் சொல்லித்தான் அவர் அரசியல் நடத்தி வந்தார். காடுவெட்டி குடும்பம் ராமதாசுடன் நெருக்கமாக இருந்த, காடுவெட்டியார் குரு குடும்பம் இப்போது மீண்டும், மீண்டும் ராமதாசை குற்றம் சாட்டி வருகிறது. தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் தான் ராமதாஸ் கவலைப்படுவார். மற்றவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார் என்று காடுவெட்டி குரு குடும்பத்தார் தெரிவித்து வருகிறார்கள். ஐந்து ஆண்டுகளாக பாஜகவை விமர்சனம் செய்து விட்டு, இப்போது கூட்டணி வைத்து உள்ளார் என்றால், சுய நலம் தானே காரணம். எனவே மக்களே நீங்கள் தான் சரியான தீர்ப்பை வழங்கிட வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

click me!