
கமலைவிட ரஜினியின் அரசியல் பிரவேசம் தாமதமாவது, முயலும் ஆமையும் கதை போன்றுதான் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசன், தனது அரசியல் பயணத்தை இன்று ராமேஸ்வரத்தில் இருந்து துவக்கியுள்ளார். இன்று மாலை மதுரை, ஒத்தக்கடையில் நடைபெறும் விழாவில் கட்சி கொடி மற்றும் கட்சியின் கொள்கை குறித்து அறிவிக்க உள்ளார்.
நடிகர் கமல் ஹாசனுக்கு முன்பாக அரசியல் பிரவேசம் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் கூறிவந்தாலும், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அன்று அறிவித்திருந்தார். ஆனாலும், நடிகர் கமல் ஹாசன், தனது அரசியல் பயணத்தை அவருக்கு முன்பாகவே துவக்கிவிட்டார். இன்று அவரது அரசியல் கட்சியின் கொடி மற்றும் கொள்கைகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், கமலின் அரசியல் பிரவேசத்தால் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பாதிக்கப்படுமா? ஜெயலலிதாவின் மறைவால் குழம்பிப்போயுள்ள தமிழக அரசியல் களத்தில், ரஜினிக்கான இடத்தை கமல் தட்டிப்பறிப்பாரா? என்பது உள்ளிட்ட கேள்விகள் மக்கள் மனதில் எழுந்து வருகிறது.
இது குறித்து, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியனிடம், பிரபல வார இதழ் ஒன்று பேட்டி கண்டது. அது குறித்து பேசிய தமிழருவி மணியன், 40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருப்பவர்கள் ரஜினியும் கமலும். அவர்களுக்கென்று தனித்தனி பார்வையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். படத்திற்கு இருக்கக்கூடிய வரவேற்பும், வசூலும், எப்படி அதிகமாகுமோ, அதேபோலத்தான் இங்கே கட்சியாக பார்த்தாலும் கமலைவிட கூடுதலாக வாக்குவங்கி, வரவேற்பு எல்லாமே ரஜினிக்கு அதிகமாகத்தான் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை என்று கூறினார்.
கமலைவிட ரஜினியின் அரசியல் பிரவேசம் தாமதமாவது என்று கேள்விக்கு பதிலளித்த தமிழருவி மணியன், முயலும், ஆமையும் கதை அனைவருக்குமே தெரியும். அதுபோன்றுதான் நான் சொல்லும் கருத்தும். எனவே சந்தேகமே வேண்டாம். ரஜினிக்கான வாக்குகள் எப்போதும் இருக்கும்.
புதிய கட்சிகள், புறப்பட்டாலும் சரி, புதிய மனிதர்கள் புறப்பட்டாலும் சரி, ரஜினிக்கு என்று மக்கள் மனதில் இருக்கக்கூடிய அந்த மிகப்பெரிய மதிப்பையும், மரியாதையையும், எதிர்பார்ப்பையும் மாற்றிவிட எந்த சக்தியாலும் முடியாது என்று தமிழருவி மணியன் கூறினார்.