
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்றும், கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் அதிமுகவுக்கு அடிமை இல்லை என்றும் மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுமுன் அன்சாரி கூறியுள்ளார்.
ஜெ. மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் நடைபெற்று, வேட்பாளர்களும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
திமுகவுக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதன் வேட்பாளர் மருதுகணேஷ் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளார். அதிமுக வேட்பாளரான மதுசூதனன், ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவர் கருணாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு ஆகியோர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். இதையடுத்து அவர்கள் வெற்றியும் பெற்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரிந்த அதிமுக அணிகள் மீண்டும் ஒன்றிணைந்தபொது கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரித ஆகியோர் டிடிவி தினகரன் அணிக்கே ஆதரவாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறும்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதிமுகவுக்கு அடிமை இல்லை என்றும், அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டது தேர்தல் யுத்திதான் என்றும் கூறினார். மனிதநேய ஜனநாயக கட்சிக்கு தனி கோட்பாடுகள், கொள்கைகள் உள்ளன எனவே அதிமுகவுக்கு எனது ஆதரவு நிச்சயம் இரக்காது என்றும் தமிமுன் அன்சாரி கூறினார்.