
தோல்வி பயத்தின் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பாஜக ரத்து செய்ய கோருவதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடைபெற இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்தமுறை பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வெளி மாவட்டத்திலிருந்து ஆர்.கே.நகருக்குள் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, மாலை 5 மணிக்குமேல் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது, அனுமதி பெற்ற எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வேட்பாளர்களுடன் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
ஆர்.கே.நகரில் தேர்தல் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதை முறையாக கண்காணிக்குமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அனுமதி பெறாத வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வராமல் போலீசார் கண்காணிக்க வேண்டும். மீறி அனுமதி பெறாத வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வந்தால், போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
அதேபோல, அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே வேட்பாளருடன் வருவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். அனுமதி பெற்றவர்களை விட அதிகமானோர் வேட்பாளருடன் வருவது கண்டுபிடிக்கப்பட்டாலும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
ஆனாலும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகக் கூறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுடன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முடியாது. நிரந்தரமாக தேர்தலை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை தமிழிசை சவுந்தரராஜன் முன்வைத்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தினகரன், தோல்வி பயத்தின் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பாஜக ரத்து செய்ய கோருகிறது. காவல்துறை நடுநிலையுடன் நடக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம். தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் நாயர் நியாயமாக நடந்துகொள்வார் என நம்புவதாகவும் தினகரன் தெரிவித்தார்.