
தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பாஜக குட்டிக்கரணம் அடித்துவரும் நிலையில். அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் பொது வெளிகளில் பேசும் பேச்சுக்கள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட சிலர் பாஜகவுக்கு முழுக்குபோட தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.அதன் பின்னர் அக்கட்சி இங்கு எழுந்திருக்க முடியாமல் படுத்தே விட்டது. இதனிடையே பாஜக எப்படியாவது தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என கடும் முயற்சி செய்து வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக்கப்பட்டார். இதைத் தவிர பாஜக தமிழக அரசுக்கு ஆதரவாக எதையுமே செய்யவில்லை.
ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய் மின்திட்டம், நீட் தேர்வு, உணவு பாதுகாப்புச் சட்டம் , ஜிஎஸ்டி போன்ற திட்டங்களை இபிஎஸ், ஓபிஎஸ்ன் பலவீனத்தைப் பயன்படுததி தமிழகத்தில் நிறைவேற்றி பாஜக சாதித்துக்காட்டியது.
ஆனால் தமிழக மக்கள் பெரும்பாலும் இத்திட்டங்களை கொஞ்சமூம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தமிழக மக்கள் மத்தியில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவைத் தந்ததது.
பொதுவாக தமிழகம் எப்போதுமே அமைதிப்பூங்காவாகவே திகழ்ந்து வருகிறது. சாதி,மத மோதல்கள் போன்றவற்றுக்கு ,இங்கு கொஞ்சம் கூட இடமில்லை என்பதே உண்மை.
ஆனால் அண்மைக்காலமாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் போன்றோர் மதவாதத்தைத் தூண்டும் வகையில் அநாகரீகமாகவும், அவமானப்படுத்தும் வகையிலும் மிக மோசமாக பேசி வருகிறார்கள்.
அவர்களைப் பின்பற்றி சில இரண்டாம் கட்டத் தலைவர்களும் அசிங்கமாக பேசி வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து விவகாரம், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்காதது போன்ற பிரச்சனைகளில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பெரிதாக கருத்து எதுவும் சொல்லாமல் பட்டும் படாமலேயே பேசி வருகிறார்.
ஆனால் எச்.ராஜா. எஸ்.வி..சேகர் போன்றோர் இப்பிரச்சனையில் பேட்டி அளிப்பது, கருத்துத் தெரிவிப்பது போன்றவை தமிழக மக்களை மட்டுமல்லராமல் பாஜகவினரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் சற்று அடங்கி வாசித்தாலும் இவர்களின் பேச்சு, தமிழகத்தில் பாஜக முற்றிலும் காலூன்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் எச்.ராஜா, எஸ்.விசேகர் போன்றோரை பாஜக மேலிடமும் அடக்கி வைக்காமல் வேடிக்கை பார்த்து வருவது தமிழிசை போன்ற மிவாத தலைவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கல் வீசுவோம், சோடாபாட்டில் வீசுவோம் என்று ஆன்மீகவாதிகளுக்குரிய பொறுப்பில்லாமல் பேசி வருவது போன்றவையும் தமிழிசைக்கு வெரும் மன உளைச்சலைத் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமல்லாமல் பாஜகவில் இருந்தே விலகிவிடலாமா என்ற யோசனையில் அவர் உள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்ற மனநிலையில்தான் வானதி சீனிவாசனும் உள்ளதாக தெரிகிறது. எது எப்படியோ எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் தமிழகத்தில் பாஜக என்னும் பிரமாண்டமான தேசிய கட்சியை முற்றிலுமாக இங்கு வளரவிடாமல் தடுத்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.