
திண்டுக்கல்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே டி.டி.வி.தினகரன் தலைமையில் தனிக்கட்சி தொடங்குவது உறுதி என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அணியைச் சேர்ந்த தங்க தமிழ்செல்வன் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.
அந்த பேட்டியில், "122 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டுதான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கினோம். எந்த தவறும் செய்யாத எங்களை பதவி நீக்கம் செய்தனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருக்கிறோம். இதில், எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என முழுமையாக நம்புகிறோம்.
எங்களுக்கு எதிராக தீர்ப்பு வருமானால் மீண்டும் மேல்முறையீடு செய்ய மாட்டோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவோம்.
திமுகவுடன் இரகசிய கூட்டணி என்பது தவறு. அவர்கள் எங்களை எதிர்த்து போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்கள். தி.மு.க.வை மக்கள் விரும்பவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக டி.டி.வி.தினகரன் தலைமையில் தனிக்கட்சி தொடங்குவது உறுதி. இந்த தேர்தலில் அதிக இடங்களை பிடிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.