சந்தர்ப்பவாதம் இல்லேன்னா அரசியல் ஏது? அதுக்கு தானை தலைவர் தளபதி ஸ்டாலின் முதல், தமீமுன் அன்சாரி வரை எல்லாருமே ஒரே குட்டையில் ஊறியவர்கள்தானே?
சந்தர்ப்பவாதம் இல்லேன்னா அரசியல் ஏது? அதுக்கு தானை தலைவர் தளபதி ஸ்டாலின் முதல், தமீமுன் அன்சாரி வரை எல்லாருமே ஒரே குட்டையில் ஊறியவர்கள்தானே?
கடந்த 2016 சட்டசபை தேர்தலுக்கு சற்று முன் உருவானது மனிதநேய மக்கள் கட்சி. அதன் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரிக்கு தன் கூட்டணியில் வாய்ப்பு கொடுத்து, சீட்டும் கொடுத்து, ஆசியும் கொடுத்து...அதற்கெல்லாம் மேலாக தங்களின் சின்னமான இரட்டை இலையையும் கொடுத்து ஜெயிக்க வைத்தார் ஜெயலலிதா.
அன்சாரி எப்போதுமே தன்னை சித்தாந்தவாதியாகவும், ஜெ., விசுவாசியாகவும் காட்டிக் கொள்வார். ஜெ., மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.வில் உள் களேபரங்கள் வந்தபோது கூட எடப்பாடியின் மனசு ஓவராய் நோகாதபடிதான் முடிவெடுத்தார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வின் கூட்டணி பி.ஜே.பி.யுடன் தான் என்றதுமே, ஸ்ட்ரெய்ட்டாக தி.மு.க.வுக்கு சப்போர்ட் செய்ய துவங்கிவிட்டார் தமீமுன்.
நேற்று கோயமுத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினின் முன்பாக மைக் பிடித்தவர், “மோடி இன்று இந்த தேசத்தை நாதுராம் கோட்சே பாதையில் அழைத்துச் செல்கிறார். மக்கள் பணத்தில் உலகம் சுற்றுகிறார். ஆனால் தேசத்தின் வளர்ச்சி?....இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினின் தலைமையில் நாற்பது தொகுதிகளில் நாற்பதிலும் வெல்வோம். பாசிச, மதவாத சக்திகளுக்கு இந்த தேர்தலில் பெரும் பாடம் புகட்டுவோம். என்னைப் பார்த்து ‘இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றுவிட்டு, இன்று தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்கிறீர்களே?’ என்று விமர்சிக்கின்றனர் சிலர். என்னை விட, என் கட்சியை விட, இந்த தேசத்தின் நலன் முக்கியம். மீண்டும் சொல்கிறேன் ஸ்டாலின் தலைமைல் நாற்பதும் நமதே.” என்று அமர்ந்தார்.
தனக்கு ‘எம்.எல்.ஏ’ எனும் பெரும் அடையாளத்தை கொடுத்த அ.தி.மு.க. இயக்கத்தின் தோல்விக்காக குரல் கொடுக்கும் தமீமுன்னை ஆளுங்கட்சியினர் விமர்சித்துக் கொட்டுகிறார்கள். “பி.ஜே.பி. பிடிக்கவில்லையென்றால் எங்கள் அணியை ஆதரிக்காமல், பிரசாரத்துக்கு வராமல், கருத்துச் சொல்லாமல் பேசாமல் இருந்துவிட வேண்டிதானே? இப்படி தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்றும், ஸ்டாலினை தாங்கிப் பிடிப்பதும் அரசியல் அசிங்கம். இவருக்கு தனியரசு எவ்வளவோ மேல். எங்கள் கூட்டணியில் பி.ஜே.பி.யை எதிர்ப்பவர், எங்களுக்கு ஆதரவு தருகிறார். அம்மா கொடுத்த வாழ்க்கையை மறந்து அம்மா கட்சிக்கு எதிராகவே பேசுவது கீழ்த்தர அரசியல்.” என்கிறார்கள். தமீமுன் என்ன சொல்றீங்க?