
கரூர் தொகுதி மக்களவை தேர்தல் உஷ்ணத்தில் தகிக்கிறது. அங்கு போட்டியிடும் துணை சபாநாயகர் தம்பிதுரையை தோற்கடித்தே தீருவேன் என சபதமேற்று சமீபத்தில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியை காலில் றெக்கை மாட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட கரூரில் ஜோதிமணியும் தன் பங்கிற்கு தம்பிதுரையின் இமேஜை டேமேஜாக்கி வருகிறார். மணப்பாறை அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிமணி, ‘’கரூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊர்களிலும் கடுமையான தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. எனவே, எல்லா கிராமத்திற்கும் தரமான குடிநீர் வழங்குவதை இலக்காக வைத்துள்ளோம். தோல்வி பயம் தெரிவதால் தம்பிதுரை மிகவும் கீழ்த்தரமான செயலை செய்து வருகிறார்.
இதற்காக நாங்கள் துக்கப்படமாட்டோம், துயரப்படமாட்டோம், நிச்சயமாக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை தோற்கடிப்பேன். இந்த தேர்தலுடன் தம்பிதுரையின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்க இருக்கிறது. அதனால்தான் அவர் வாக்கு கேட்டு செல்லும் இடத்தில் மக்கள் விரட்டி அடிக்கின்றனர். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் அரசு சார்பில் கொண்டு வரவேண்டிய கல்லூரிகளுக்கு பதிலாக தனக்கு சொந்தமாக 45 கல்லூரி, ஒரு வேளாண் கல்லூரி மற்றும் ஒரு மெடிக்கல் கல்லூரிகளை கட்டி முடித்து பணம் சம்பாதித்து வருகிறார்.
கரூர் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் காவல்துறை கரை வேட்டி கட்டிய ஏவல்துறையாக செயல்படுகிறது. புதுச்சேரி உட்பட 40 தொகுதியிலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. இதைச் சொல்ல நான் வருத்தப்படுகிறேன்' என்று அவர் கூறினார்.