
தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அம்மா அணி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் மிகச் சரியானவை என்றும், அவற்றில் போலியானவை எதுவும் கிடையாது என்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக ஓபிஎஸ் மற்றும் சசிகலா என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் பஞ்சாயத்தைக் கூட்டியதில், கட்சியையும், ஆட்சியையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.
அதே நேரத்தில் தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக் கூறி இருதரப்பினரும லட்சக்கணக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அதிமுக யாருக்கு என அடுத்த 10 நாட்களில் முடிவு செய்து அறிவிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில், சசிகலா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கடந்த செவ்வாய் கிழமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் தம்பிதுரை, தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அம்மா அணி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் மிகச் சரியானவை என்றும், அவற்றில் போலியானவை எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுகவும், இரட்டை இலை , சின்னமும் ஆளும் அதிமுக அரசுக்கே சொந்தம் எனவும் தெரிவித்துள்ளார்.