
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார்.
நேற்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வீடியோ விவகாரம் குறித்து ஆளுநரிடம் முறையிட்டிருந்தார். இந்த நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை இன்று காலை சுமார் 11 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நன்றாக செயல்படுகிறது என்றும் தம்பிதுரை கூறினார்.
எடப்பாடி தலைமையிலான அரசு 4 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவுக்குள் அணி என்பதே கிடையாது; அதேபோல் பிளவு என்பதும் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்தார்.
அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எனவே ஆட்சி கவிழாது என்றார்.
ஜெயலலிதாவின் ஆட்சியை கலைக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை எதற்காக கலைக்க வேண்டும் என்றும் தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
பண பேர விவகாரத்தில் எதிர்கட்சிகள் வேண்டுமென்றே புழுதிவாறி தூற்றுவதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார். இல்லாத ஒரு விஷயத்துக்கு சிபிஐ விசாரணை தேவையற்றது என்றும் அவர் தெரிவித்தார். வீடியோ காட்சி குறித்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த தம்பிதுரை, வீடியோ காட்சியை, எம்.எல்.ஏ. சரவணன் மறுத்துள்ளதாக கூறினார். அதிமுகவில் யாரும் குதிரை மீது ஏறியதில்லை என்றும் குதிரை பேரம் நடத்தியதில்லை என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க திமுக திட்டமிடுவதாகவும் அவர் கூறினார். ஆட்சியைக் கலைத்துவிட்டால் முதலமைச்சராகலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். ஆனால் அவரின் எண்ணம் நிறைவேறாது என்றார். மு.க.ஸ்டாலின், ஆளுநர் கூறிய புகார் தவறானது என்றும் அப்போது அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் தனி அணியாக செயல்பட முடியாது என்றும் மீறி செயல்பட்டால் அவர்கள் பதவி பறிபோய்விடும் என்பது அவர்களுக்கு தெரியும் என்று அவர் கூறினார்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நல்ல உறவு நீடித்து வருகிறது. குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்த கேள்விக் பதிலளித்த அவர், அதிமுக கழகத்தின் முன்னோடிகள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்கள் என்றார்.