திமுகவுக்கு கைகொடுத்து காப்பாற்றிய செங்கோட்டையன், தங்கமணி : சபையை தெறிக்க விடும் ரகளை ரியாக்‌ஷன்கள்!!

First Published Jun 18, 2017, 12:09 PM IST
Highlights
sengottayan thangamani helps DMK in TN assembly


வெளிநடப்பும், வெளியேற்றமும் மட்டுந்தானா சபை நடவடிக்கைகள்? என்று சட்டசபை மாண்பு மீது மங்காத மரியாதை வைத்திருப்பவர்கள் புலம்பித் தீர்க்கிறார்கள். 

ஆனால் இவை மட்டுமல்ல வாத விவாதங்களும் சபையை நிறைக்க துவங்கியுள்ளது உண்மையே. நட்பு முகம், ஆவேச விளாசல்கள், அணுசரணை வார்த்தைகள், குறுக்கீடு குமுறல்கள் என்று ரகம்ரகமான எமோஷன்களுடன் நகர துவங்கியுள்ளது சட்டசபை. 

அதன் ஹைலைட் விஷயங்களில் இதோ சில:
*    உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து தி.மு.க.வின் எ.வ.வேலு எழுப்பிய பிரச்னைக்கு அமைச்சர் காமராஜ் சற்றே காரமாக பதில் தந்தார். அவர் பேசிய சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனால் அதை அ.தி.மு.க.வினர் எதிர்த்தனர். கூச்சல் குழப்பம் உச்சம் சென்ற போது சட்டென்று எழுந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ‘அமைச்சர் கூறியதை சபைக்குறிப்பில் இருந்து நீக்குங்கள்.” என்றார். சபாநாயகரும் அதை ஏற்றதால் பிரச்னை முடிந்தது. அணுசரனையான முடிவை சொன்ன செங்கோட்டையனை இதன் பின் நட்புடன் எதிர்கொண்டனர் தி.மு.க.வினர்.

*    சபையின் மூன்றாவது நாளன்று கேள்வி நேரம் முடிந்ததும்,  கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் வழங்கப்பட்டது குறித்த வீடியோ விவகாரத்தை ஸ்டாலின் எடுத்துப் பேசினார். அவர் பேசியதை சபாநாயகர் முதலில் அனுமதித்தார். ஆனால் அமைச்சர்  ஜெயக்குமார் தலையிட்டு குமுறலாக ஒரு கோரிக்கை வைத்தார். அதன் பின் சபைக்குறிப்பில் இருந்து ஸ்டாலின் பேச்சை நீக்குவதாக அறிவித்தார் சபாநாயகர். 

*    கூவத்தூர் பண விவகாரம் தொடர்பான எம்.எல்.ஏ. சரவணனின் வீடியோவை சி.டி.யாக்கி சபைக்கு கொண்டு வந்திருந்தார் ஸ்டாலின். வெளிநடப்பு செய்த பின் அந்த சி.டி.யை கையில் எடுத்தபடி வந்தவர் அதை தலைக்கு மேல் தூக்கி காண்பித்தார். உடனே ஒரு குறும்புக்கார நிருபர் “சார், என்ன பாகுபலி சி.டி.யா? இல்ல உதயநிதியோட புதுப்பட சி.டி.யா?” என்று கேட்க, “பாகுபலி, உதயநிதி படங்களை தியேட்டர்ல போயி பாருங்க. திருட்டு சி.டி. கூடாது.” என்று அந்த ரணகளத்திலும் குதூகலமானார் ஸ்டாலின். 

*    குடிநீர் பிரச்னை குறித்து தி.மு.க. ஒரு விவாதத்தை கிளப்பியது. அப்போது துரைமுருகனிடம் ‘ஆதாரத்தை எனது அறையில் வந்து கொடுங்கள்.” என்றார். உடனே துரைமுருகன் “அறையில்தான் கொடுக்க வேண்டுமா?” என்று சொல்லி தனது கன்னத்தில் அடித்துக் காண்பித்தார். இதற்கு பொதுவான சிரிப்பலை எழுந்தாலும், ஸ்டாலின் இதை ரசிக்கவில்லை.

* அந்தியூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை கிரிக்கெட் அணிகளுக்கு ஒப்பிட்டு கூறினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரினர். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு காட்டினர். ஆனால் அமைச்சர் தங்கமணி எழுந்து ‘உறுப்பினர் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குங்கள்.” என்று சபாநாயகரிடம் கோர, அவரும் நீக்குவதாக தெரிவித்தார். 

அதனால் தங்கமணியை சிநேகத்துடன் பார்த்தனர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். இப்படியாக கலகலத்தும், கலகலப்பாகவும், கடுப்பாகவும் நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது தமிழக சட்டசபை...

click me!