
சசிகலா குடும்பத்தின் பிடி இல்லாத அதிமுக என்ற சிந்தனை ஏற்கனவே, கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு வந்து விட்டது. அதற்கு, பாஜக மேலிடம் பச்சை கொடி காட்டியதால், அந்த முயற்சி தற்போது தீவிரமாகி உள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரி துறையினர் நடத்திய சோதனையை அடுத்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பலரும் போர்க்கொடி தூக்கினர்.
ஆனால், விஜயபாஸ்கரை நீக்குவதற்கு தினகரன் விரும்பவில்லை. அதனால், துணை பொது செயலாளர் பதவியில் இருந்து. அவர் விலகி இருக்கவேண்டும் என்று கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர் வலியுறுத்த கடும் கோபமடைந்தார் தினகரன்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, சுகேஷ் சந்திரா என்ற புரோக்கரிடம் 1 கோடியே 30 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக. தினகரன் மீது டெல்லி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், இரட்டை இலை சின்னத்தை பெற்று தந்தால், 60 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக, தினகரன் கூறியதாகவும், புரோக்கர் சுகேஷ் சந்திரா போலீசிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், தினகரனுக்கும், சுகேஷ் சந்திராவுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலையும் போலீசார் கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், தினகரன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினகரன் கைது செய்யப்படுவதால், கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க என்ன செய்வது? என்பது குறித்து மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
மேலும், தினகரனும், சசிகலா குடும்பத்தினரும் கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் வரை, கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை மீட்க முடியாது என்பதால், தினகரனையும், சசிகலா குடும்பத்தினரையும் கட்சியை விட்டு கழற்றிவிட அதிமுக மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று ஒரேநாளில், முதல்வர் எடப்பாடியை இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளார் தம்பிதுரை.
மேலும், நேற்று இரவு, அமைச்சர் தங்கமணி வீட்டில், அமைச்சர்கள் பலரும் சந்தித்து பேசி, இரு அணிகள் இணைப்பையும், தினகரனை வெளியேற்றுவது குறித்தும் இறுதி முடிவு எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.