
அதிமுக இரு அணிகளும் ஒன்று சேருவது குறித்து பேச்சு வார்த்தை நடப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதனை அமைச்சர்கள் அனைவரும், வரவேற்பதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், அதுபோல் தங்களிடம் யாரும் இதுவரை எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி கூறியுள்ளார். இதுகுறித்து கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஓ.பன்னீர் செல்வம் அணியுடன், சசிகலா அணியினர் சேர்வது குறித்து இதுவரை எவ்வித தகவலும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. யாரும் எங்களை தொடர்பு கொண்டு அதுபற்றி பேசவில்லை.
நாங்கள் இணைவதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறுகின்றனர். ஆனால், அதுபற்றிய அதிகாரப்பூர்வமாக யாரும் எங்களிடம் பேசவில்லை.
அப்படி நாங்கள் ஒரே அணியில் இணைந்தாலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் பின் வாங்க மாட்டோம். அதே நேரத்தில் யார் முதலமைச்சர் என்ற பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
இரு அணிகள் இணைவது குறித்து தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், அதை பற்றி எங்களிடம் யாரும் கூறவில்லை.
ஒரே அணியில் நாங்கள் இணைந்தால், அதிமுகவில் சசிகலா, தினகரன் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் யாரும் இருக்க கூடாது. கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தினரை சேர்க்க கூடாது. அவர்களை ஓரங்கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.