
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகள் உருவானது. இதையடுத்து, இரு தரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் சுமத்தி வந்தனர்.
மேலும், கடந்த 12ம் தேதி நடக்க இருந்த ஆர்கே நகர் இடைத் தேர்தலில் இரு அணிகளும் களம் இறங்கின. பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதனால், பெரும் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில் வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக கூறி, தேர்தல் ஆணையம், ஆர்கே நகர் இடை தேர்தலை ரத்து செய்தது.
இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதாக பரபரப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது, சென்னை துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் போர்க்கப்பலில் அமைச்சர்கள் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
பிளவு பட்ட அதிமுக இரு அணிகளும் ஒன்று சேருவது நாடகம் போல தோன்றுகிறது. இவர்கள் ஒன்று சேர்ந்தால், ஜெயலலிதாவின் மரணம் மூடி மறைக்கப்படும்.
இதுவரை ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக கூறிய அவர்கள், ஒன்று சேர்ந்தால், அதை பற்றி எப்படி நீதி விசாரணைக்கு உட்படுத்துவார்கள். இந்த அரசியல் விளையாட்டை அதிமுகவினர் ஆட தொடங்கிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.