
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மாணவனின் இறப்பு கொலையா? தற்கொலையா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோட்டூர்புரத்தில் ஐ.ஐ.டி கல்லூரி இயங்கி வருகிறது. கொரோனாவின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால் ஐ.ஐ.டி விடுதியில் மட்டுமே மாணவர்கள் தங்கி ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 6.15 மணியளவில் ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள ஹாக்கி மைதானத்தில் விளையாடுவதற்காக விளையாட்டு பயிற்சியாளர் ராஜூ தனது நண்பர்களுடன் வந்தார்.
அப்போது எரிந்த நிலையில் ஆண் வாலிபரின் சடலம் ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த உண்ணி கிருஷ்ணன் நாயர் (22) என்பது தெரியவந்தது. மேலும் கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.ஐ.டி-யில் பிராஜெக்ட் அசோசியெட்டாக சேர்ந்துள்ளதும், வேளச்சேரியில் உள்ள லதா தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ஐ.ஐ.டி-யில் தனது பிராஜக்ட் வேலையைச் செய்து வந்துள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று காலை உண்ணி கிருஷ்ணன் நாயர் கல்லூரிக்கு வந்ததாகவும் போலீசார் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ள நிலையில் மாலை அவரின் உடல் ஹாக்கி மைதானத்தில் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது தற்கொலைதானா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதா எனவும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குபதிவு செய்து உண்ணி கிருஷ்ணன் இறப்பிற்கான காரணம் கொலையா? தற்கொலையா? என்ற பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.