சூடு பிடிக்கும் அரசியல் களம்... இப்போதைய குறி ‘கொறடா’ பதவி மீது! கலக்கத்தில் எடப்பாடி!

 
Published : Oct 19, 2017, 12:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
சூடு பிடிக்கும் அரசியல் களம்... இப்போதைய குறி ‘கொறடா’ பதவி மீது! கலக்கத்தில் எடப்பாடி!

சுருக்கம்

tensions rise around tamilnadu politics what will happen this month end

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் அரசு கவனத்தில் இருக்க, நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்  கொண்டாட்டத்தில் கவனத்தில் இருக்க... இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது தமிழக அரசியல் களம். 

அக்டோபம் மாதத்தில் சில முக்கிய நிகழ்வுகள், நீதிமன்றங்களை மையமாக வைத்து நடந்தேறின. இரட்டை இலை சின்னம் மீட்பு விவகாரம், தேர்தல் ஆணையத்துக்கும் நீதி மன்றத்துக்குமான பரிமாறல்கள் என அதிமுக.,வை மையமாக வைத்து ஒரு புறம் அரசியல் களம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மறு புறம், தினகரன் அணியின் 18 எம்.எ.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கிலும், அதற்கு முன் ஓபிஎஸ்., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 12 பேரை நீக்கக் கோரும் வழக்கிலும் அக்டோபரைக் கடந்து அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

இந்நிலையில் இந்த வழக்குகள் குறித்த பின்னணியுடன் தற்போது விவாதக் களம் சூடு பிடித்துள்ளது. இந்த விவாதங்களின் ஒட்டு மொத்தக் குறியாக இப்போது இருப்பது, கொறடா உத்தரவு குறித்ததன் மீதானதுதான்! 

காரணம், சட்ட வல்லுநர்களையும் வழக்கறிஞர்களையும் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் படியான, சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி முன்னுதாரணமாகத் திகழ்கிறது தமிழக அரசியல் நிகழ்வுகள். குறிப்பாக, தினகரன், எடப்பாடி, ஓபிஎஸ்.,ஸை மையமாகக் கொண்ட இந்த நிகழ்வுகள், நீதிபதிகளையே கூட சட்டப் புத்தகங்களை ஆராயத் தூண்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 

இந்த இரு வழக்குகளிலும், முதலில் எடப்பாடி தரப்பில் வைத்தியநாதனும் சோமையாஜியும் ஆஜராயினர். தினகரன் தரப்பில் தில்லியில் இருந்து வந்தனர் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆகியோர். இதே வழக்கில், திமுக., தரப்பில் கபில் சிபில், ராகேஷ் திரிவேதி என தில்லி வழக்கறிஞர்கள் ஆஜராகினர். 

பின்னர் எடப்பாடிக்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரோத்தகியும், தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சார்பில் அபிஷேக் மனு சிங்வியும் வாதாடினர். இந்த வழக்குகளில், சென்னை வழக்கறிஞர்கள் இல்லாமல், தேசிய கவனம் பெற்ற உச்ச நீதிமன்ற, தில்லி வழக்கறிஞர்கள் வந்து ஆஜரானதால், மேலும் கவனம் பெற்றது இந்த வழக்கு. 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தில்லியிலிருந்து வந்த சில தகவல்கள் திகிலைத்தான் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில், சபாநாயகரின் முடிவு  செல்லாது என்று நீதிமன்றம் கூறுவதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது என்று வந்த தகவல், எடப்பாடியை சற்றே ஆட்டம் காண வைத்திருக்கிறது. 

அவ்வாறு இல்லாமல், சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றே தீர்ப்பு வந்தாலும், அந்த தீர்ப்பு நடைமுறை, ஓபிஎஸ் ஆதரவு 12 எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்திலும் பொருத்திப் பார்க்கப்படும். அவ்வாறு அதே விதமான நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு  வலியுறுத்தப் படும் சூழல் உருவானால், அது ஓபிஎஸ்ஸை மட்டுமல்லாது, எடப்பாடிக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். 

ஏற்கெனவே சபாநாயகர் உத்தரவுகளில் நீதிமன்றங்கள் சில முறை தலையிட்டிருக்கின்றன.  எனவே, இந்தத் தகவல்களை எல்லாம் கேட்டு, எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடித்தான் போயுள்ளாராம். 

இதனிடையே, எடப்பாடியை மேலும் கலக்கும் விதத்தில், கொறடா நியமனம் குறித்த தகவலும் உலா வருகிறது. ஜெயலலிதா மறைந்த பின்னர், புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. ஓபிஎஸ்.,ஸை தொடர்ந்து, பின்னர் எடப்பாடி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றபோது, கொறடாவும் நியமனம் செய்யப் பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். ஆனால், ஜெயலலிதா நியமித்த தாமரை ராஜேந்திரனே கொறடா பதவியில் தொடர்ந்தார். ஆனால், எடப்பாடி பதவி ஏற்ற போது, கொறடாவும் நியமனம் செய்யப் பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். அவ்வாறு நியமனம் செய்யப் படாததால், கொறடா பதவியில் இருந்து கொண்டு, தாமரை ராஜேந்திரன் இட்ட கட்டளை செல்லாது என்கிறார்கள். ஒரு கொறடாவே இல்லாத சூழலில், அது எப்படி உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும் என்ற சட்டச் சிக்கலைக் குறித்து இப்போது விவாதிக்கிறார்கள். 

புதிய முதல்வராக எடப்பாடி மற்றும் அமைச்சரவை அமைந்த நிலையில் புதிய கொறடாவாக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக  எந்த ஓர் அறிவிப்பையும் எடப்பாடி அரசு அறிவிக்கவில்லை. எனவே 18 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கி சபாநாயகருக்கு கொறடா பரிந்துரை செய்தது ஏற்கத் தக்கதல்ல என்கிறார்கள். மேலும், இதை எப்படி சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்? தான் பதவியில் இல்லை என்பதால்தான் சபாநாயகருக்கு செய்த பரிந்துரைக் கடிதத்தில் ராசேந்திரன் கையெழுத்து போடவில்லையா? என்று கேட்கிறார்கள். 

கொறடாவை நியமனம் செய்ய வேண்டியது, கட்சியின் பொதுச் செயலாளரின் பொறுப்பு. எனவே கொறடா விவகாரத்தில் சசிகலா தரப்பில் ஒரு தனி வழக்காக மனு தாக்கல் செய்யலாமா என்று தினகரன் தரப்பு ஆலோசித்துள்ளது.  ஆனால், அதிமுக.,வைப் பொறுத்த அளவில், பொதுச் செயலாளர் நியமனமே சர்ச்சைக்கு உள்ளாகிவிட்டதால், கொறடா நியமனமும் சர்ச்சைக்கு உள்ளாகிறது. இத்தகைய சூழலில்,  இப்போது யார் செய்ததை சட்டபூர்வமானது என்று நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் என்பது இப்போதும் விவாதத்துக்குரியதாகத்தான் இருக்கிறது. எல்லாம் நீதிமன்றங்களை வைத்தே இருப்பதால், தமிழக அரசின் எதிர்காலமும் நீதிமன்றத்தில் கரங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

PREV
click me!

Recommended Stories

எம்ஜிஆர், ஜெ. காலத்தில் இருந்த வரவேற்பு.. TVKவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. செங்கோட்டையன் ஓபன் டாக்
ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!