
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி தற்போது டிவிட்டரில் அவ்வப்போது பாஜக.,வையும் பிரதமர் மோடியையும் கலாய்த்து வருகிறார். வரும் 2019ல் அடுத்த பொதுத் தேர்தல் வரவுள்ளது. அதற்கான பிரசாரத்தை ராகுல் இப்போதே தொடங்கிவிட்டார். அவரது முதல் குறி, பாஜக.,வின் திட்டங்களை விமர்சிப்பது, மோடியை கலாய்ப்பது, பாஜக., தலைவர்களை விமர்சிப்பது என தீவிரமாக இயங்கி வருகிறார்.
அடிக்கடி குஜராத் மாநிலத்துக்குச் சென்று பிரசாரம் செய்தார். மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதே டிவிட்டரில் குறி வைத்து இயங்கி வருகிறார். அவரது டிவிட்டர் கணக்கு இப்போது @OfficeOfRG என்பதாக உள்ளது. இதை விரைவில் தனது பெயரிலேயே மாற்றப் போகிறாராம்.
ராகுல் காந்தி, விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில் அவர் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்படும்ம் நிலையில், ராகுலின் டுவிட்டர் பெயரையும் மாற்றலாம் என்று ராகுலின் சமூக வலைத் தளங்களை நிர்வகிக்கும் சோஷியல் மீடியா குழு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் மோடி தலைமையில் மத்தியில் அரசு அமைந்த போதே, அதுகுறித்து விமர்சித்தார். பின்னர் ஆட்சியின் குறைகள், மக்களை பாதிக்கும் விவகாரங்கள் என பலவற்றை அவ்வப்போது டுவிட்டரில் விமர்சித்து வருகிறார். ராகுலை டிவிட்டரில் 37 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். எனவே தனது பிரசாரங்களுக்கு டிவிட்டர் கணக்கை பிரதானமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் ராகுல்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு, அவரது டுவிட்டர் கணக்கை @OfficeOfRG என்ற பெயரில் இருந்து @rahulgandhi என்று மாற்ற யோசித்துள்ளார்கள்.