பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்.. மத்திய அரசை எச்சரிக்கும் திருமாவளவன்..

By Ezhilarasan BabuFirst Published Mar 13, 2021, 11:17 AM IST
Highlights

இதனால் பல்லாயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதோடு, பொது மக்களுக்கான வங்கிச் சேவையும் சீர்குலையும் சூழல் உருவாகியுள்ளது. 

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் பாஜக அரசின் கார்ப்பரேட் அரசு கொள்கைக்கு எதிராக வங்கி ஊழியர்கள் நடத்த உள்ள  வேலை நிறுத்த போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முழுமையாக ஆதரிக்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை கைவிட வேண்டுமென மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறோம். 

மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவதில் விவசாயிகள் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதலானோருக்கான கடன்கள் மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் வழங்குவதிலும், பொதுத்துறை வங்கிகளே முன்னிலையில் நிற்கின்றன. தனியார் வங்கிகள் நகர்ப்புறங்களில் மட்டுமே செயல்படும்போது கிராமப்புற  கிளைகளின் மூலம் பொதுத்துறை வங்கிகள்தான் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வருகின்றன. ஏற்கனவே 14 பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டதால், வங்கி சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் கொடுக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் மோடி அரசு அறிவிப்பு செய்துள்ளது. 

இதனால் பல்லாயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதோடு, பொது மக்களுக்கான வங்கிச் சேவையும் சீர்குலையும் சூழல் உருவாகியுள்ளது. இதை கண்டித்து பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் நோக்கோடு, எதிர்வரும்  15, 16 ஆகிய இரு தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் அமைப்புகள் அறிவிப்பு செய்துள்ளன. இந்த போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தனியார்மயக் கொள்கையை கைவிட வேண்டுமென்று கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மத்திய பாஜக அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!