அரசு பதவிகளை திமுக கட்சிக்காரர்களுக்கு கூறு போட்ட தென்காசி மாவட்ட செயலாளர்.. கிருஷ்ணசாமி பகீர்..!

By vinoth kumar  |  First Published Jan 11, 2023, 2:02 PM IST

திமுக மாவட்டச் செயலாளர் தேர்வு செய்து கொடுத்த பட்டியலைத் தான் தென்காசி மாவட்ட ஆட்சியர்; கூட்டுறவு துணை, இணை பதிவாளர்கள்; வட்டாட்சியர்கள் அறிவித்திருக்கிறார்கள் என்று சொன்னால் இதைவிட சட்டவிரோதமும், மோசடியும் கிரிமினல் நடவடிக்கையும் வேறு எதுவும் இருக்க முடியாது.


அரசு நிர்வாக பணியிடங்களை ஆளுங்கட்சி பங்கிட்டுக் கொள்வதுதான் சமூக நீதியா? என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- குரூப் 1, 2, 3 மற்றும் 4 போன்ற முக்கிய அரசுப் பணியிடங்கள் தமிழக அரசு தேர்வாணையத்தின் மூலமாக எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள 56-க்கும் மேற்பட்ட அரசுத்துறைகளில் உருவாகும் எண்ணற்ற கடைநிலை காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. உதாரணத்திற்கு, வருவாய்த் துறையின் கடைநிலை ஊழியரான தலையாரிகள்; சத்துணவு துறையில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள்; கூட்டுறவுத் துறையில் ரேஷன் கடை ஊழியர்கள்; போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள்; மருத்துவர் துறையில் செவிலியர்கள், ஆயாக்கள், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீசியன்; வேளாண் மற்றும் கால்நடைத் துறைகளில் என பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் ஆண்டுதோறும் எவ்விதமான எழுத்துத் தேர்வுகளோ, தகுதித் தேர்வுகளோ இல்லாமல் அந்தந்த துறைகள் மூலம் நேரடி நியமனங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படுகின்றன.

Latest Videos

திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருடத்தில் இது போன்ற பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் எவ்விதமான வழிமுறைகளுமின்றி ஒவ்வொரு பணியிடமும் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலும் விலை பேசி விற்கப்பட்டுள்ளதாகவே எண்ணற்ற புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் டாக்டரேட் வரை படித்த ஏறக்குறைய 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அரசாங்கங்களின் அறிவிப்புகளை நம்பி சாதாரண நியாய விலை கடை அளவீட்டாளர்கள் பணிக்குக் கூட எம்.ஏ, எம்.எஸ்.சி படித்த பட்டதாரிகளும் கூட விண்ணப்பிக்கும் அவல நிலை உள்ளது.

ஆனால், இந்த ஆட்சியில் மேற்குறிப்பிட்ட எந்தப் பதவியும் நேர்மையாக நிரப்பப்படவில்லை என்பதற்கு கடந்த எட்டாம் தேதி தென்காசி மாவட்டம் - குத்துக்கால் வலசை எஸ்.ஆர்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுகவின் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுகவினுடைய தென்காசி மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் பேசியிருப்பதே அத்தாட்சியாகும். தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களிலும் எப்படி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்பதற்கு ”ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக் காட்டாகும்.

தென்காசி மாவட்டத்தில் தலையாரி காலிப்பணியிடங்கள் 35 தான். ஆனால், 3,500 மனுக்களும்; 45 ரேஷன் கடை பணியிடங்களுக்கு 4000-த்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அவரிடத்தில் வந்ததாகவும், அதை அவர் ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என திமுகவினர் பலருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டதாகவும் வெளிப்படையாகப் பெருமையுடன் அறிவிக்கிறார். தலையாரி பதவிக்கு ஆட்சியரிடத்திலும், வட்டாட்சியர் இடத்திலும் வேலை எதிர்பார்த்துப் பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்களும், 45 ரேஷன் கடைகளுக்கு 4200 பேர் விண்ணப்பித்த விண்ணப்பங்களும் தென்காசி திமுகவின் மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதனிடம் சென்றது எப்படி? என்பதே நமது கேள்வி. அரசு நிர்வாக பணியிடங்களை ஆளுங்கட்சி பங்கிட்டுக் கொள்வதுதான் சமூக நீதியா?

திமுக மாவட்டச் செயலாளர் தேர்வு செய்து கொடுத்த பட்டியலைத் தான் தென்காசி மாவட்ட ஆட்சியர்; கூட்டுறவு துணை, இணை பதிவாளர்கள்; வட்டாட்சியர்கள் அறிவித்திருக்கிறார்கள் என்று சொன்னால் இதைவிட சட்டவிரோதமும், மோசடியும் கிரிமினல் நடவடிக்கையும் வேறு எதுவும் இருக்க முடியாது. தென்காசி மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதனால் நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய சட்டவிரோதமான தலையாரி மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் நியமனங்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதேபோல தமிழகம் எங்கும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று இருக்கக்கூடிய இந்த ஒட்டுமொத்த மோசடி பணியிட நியமனங்கள் அனைத்தையும் மாநில ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை எனில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாங்கள் செல்ல வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 

click me!