எஸ்.பி.வேலுமணிக்கு தலைக்குமேல் கத்தி.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Nov 8, 2021, 4:43 PM IST
Highlights

அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் ஏற்கனவே கடந்த ஆட்சியில் வழக்கை முடித்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்திருந்ததாகவும், ஏற்கனவே 2 மத்திய தணிக்கை துறையின் அறிக்கைகள் இவருக்கு எதிராக உள்ளது. எனவே அவருக்கு கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை தரக்கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், 10 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. 

திமுக தரப்பில்;- உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கைகாட்டும் நபர்களுக்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, அமைச்சரின் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பலகோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதேபோல அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஜெயராம் வெங்கடேஷ் தொடர்ந்த வழக்கில், `2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சுற்றுசுவர் அமைத்தல், குடிநீர்குழாய் பதித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு கே.சி.பி இன்ஜினியர்ஸ் (KCP Engineers Pvt Ltd ), எஸ்.பி பில்டர்ஸ் (SP Builders) போன்ற வேலுமணிக்கு நெருங்கிய நிறுவனங்களுக்கே டெண்டர் ஒதுக்கப்பட்டிள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக வேலுமணி தாக்கல் செய்த பதில் மனுவில்;- அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டும் எடுத்து வந்ததாகவும், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தலையிடுவதில்லை என்று தெரிவித்திருந்தார். ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல என்றார். 

கடந்த முறை இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மேற்கொண்டு இந்த விவகாரத்தை நிலுவையில் வைக்காமல் 'அறப்போர் இயக்கம்' மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தெரிவித்தார்.  வேலுமணி தரப்பில் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம், தனக்கு எதிரான வழக்கு எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, இரு வழக்குகளின் விசாரணையையும் ஒத்திவைக்கப்பட்டது. 

அதன் அடிப்படிடையில் மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்புடைய அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். ஆரம்ப கட்ட விசாரணை தொடர்பான ஆவணங்களை கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். 

அப்போது வேலுமணி தரப்பில்  ஆரம்ப கட்ட விசாரணையை கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று வாதிடப்பட்டது. இதனிடையே, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் ஏற்கனவே கடந்த ஆட்சியில் வழக்கை முடித்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்திருந்ததாகவும், ஏற்கனவே 2 மத்திய தணிக்கை துறையின் அறிக்கைகள் இவருக்கு எதிராக உள்ளது. எனவே அவருக்கு கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை தரக்கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை முடித்து 10 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை வழக்கில் சேர்க்கப்பட்டால் கீழமை நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

click me!